முன்பே வாணிகப் போக்குவரத்து நடைபெற்று வந்ததென்று சேஸ் (Sayce) என்பார் தம் ஹிப்பர்ட் டெசாற்பொழிவுகளில் (1887) குறிப்பிட்டுள்ளார். சிந்துவெளி நாகரிகச் சின்னங்கள் கண்டுபிடிக்கப் படுவதற்குப் பல ஆண்டுகட்கு முன்பே இக்கருத்தை இவர் வெளியிட்டார். சிந்துவெளியாராய்ச்சிகள் தம் கூற்றை மெய்ப்பிக்கும் என்பதை அன்று அவர் அறியார். தாம் கொண்ட முடிபுக்கு இரு சான்றுகளை அவர் எடுத்துக் காட்டினார். ஒன்று ; சுமேரிய மன்னரின் தலைநகரமான ‘ஊர்’ என்ற இடத்தில் சந்திரபகவானுக்கு எழுப்பிய கோயில் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டுத் தேக்க மரத்தின் துண்டு ஒன்றும் அச் சிதைவுகளில் காணப்பட்டது. ‘ஊர்’ என்ற அவ்வூர் கி. மு. மூவாயிரத்திலேயே அழிந்து போய்விட்டதாகையால் அத் தேக்கமரத் துண்டின் வயதை ஐயாயிரம் ஆண்டுகளுக்குமேல் மதிப்பிடலாம். கேரள நாட்டிலிருந்து கி.மு. மூவாயிரத்துக்கு முன்னரே தேக்கமரம் ஏற்றுமதி யாயிற்று என்று இதனால் அறிகின்றோம். இரண்டு பழங்கால உடைகளைக் குறிப்பிடும் பாபிலோனிய நாட்டுப் பட்டியல் ஒன்றில் மஸ்லின் என்னும் துணிவகையைக் குறிக்கும் ‘சிந்து’ என்னும் சொல் எழுதப்பட்டுள்ளது. மஸ்லின் என்பது மிகமிக நுண்ணிய துணிவகையாகும். அக் காலத்தில் மிக நுண்ணிய துணிவகைகள் தமிழகத்தில் நெய்யப்பட்டு வந்தன. இத்துணி தமிழகத்திலிருந்து பாபிலோனியாவுக்கு ஏற்றுமதியாகி இருக்க வேண்டும். சிந்து என்னும் சொல் தமிழில் கொடியைக் குறிக்கும்.1 கொடி துணியாலானது. எனவே, இச் சொல் துணியையே குறிக்கலாயிற்று. கன்னடத்திலும் துளுவிலும் துணிக்குச் ‘சிந்து’ என்று பெயர் வழங்குவது குறிப்பிடத்தக்கது. இத் துகில் தமிழகத்திலிருந்து பாபிலோனியாவுக்குக் கடல் வழியாகத்தான் சென்றிருக்கவேண்டும் ; அன்றிப் பாரசீகத்தின் வழியாகச் சென்றிருக்க முடியாது. பாரசீக மொழியில் ‘சி’ என்னும் எழுத்தொலி ‘ஹி’ என்று மாறும். பாரசீகத்தின் வழியாக இத்துணி ஏற்றுமதியாகி இருந்தால் அதன் பெயர் ‘ஹிந்து’ என்று மாறியிருக்கவேண்டும். அப்படியின்றி அது பாபிலோனியாவில் ‘சிந்து’ என்றே வழங்கிற்று. எனவே, கேரளத்திலிருந்து துணியானது கடல் வழியாக நேராகவே பாபிலோனியாவுக்குச் சென்றது என்று ஊகிக்க வேண்டியுள்ளது. சிந்து என்னும் சொல்லுக்கும் சிந்து என்னும் ஆற்றின் பெயருக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. 1. கந்தரந்தாதி, 21. |