பக்கம் எண் :

452

                  18. ஐரோப்பியரின் வரவு

     இந்தியாவில் போர்ச்சுகீசியருக்கு ஏற்பட்டிருந்த அரசியல் ஏற்றத்தையும்,
வாணிகச் செல்வாக்கையும் கண்டு ஆங்கிலேயர் மனம் புழுங்கினர்.
இங்கிலாந்து அரசி எலிசபெத் வழங்கிய பட்டயம் ஒன்றின்படி ‘கிழக்கிந்தியக்
கம்பெனி’ என்னும் பெயரில் வாணிக நிறுவனம் (1600ஆம் ஆண்டு, டிசம்பர்
31ஆம் தேதி) ஒன்று தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் சில ஆண்டுகள்
அதற்குப் பல இன்னல்களும் இடர்ப்பாடுகளும் தோன்றின. ஆனால்,
நாளடைவில் அது முழு வேகத்தில் செயல்படலாயிற்று ; அக் கம்பெனியின்
முதல் தொழிற்சாலையானது சூரத் என்னும் ஊரில் கட்டப்பட்டது. சர் தாமஸ்
ரோ என்னும் ஆங்கிலேயர் 1616-18 ஆண்டுகளில் டில்லி முகலாயர்
அரசவையில் அமர்ந்திருந்து தம் நாட்டு வாணிக முன்னேற்றத்துக்குப் பல
உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றார். ஆங்கிலேயர் வாணிகத்தின்
வளர்ச்சியிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்து வரவேண்டும் என்றும், நாடு
பிடிக்கும் எண்ணத்துடன் இந்திய மண்ணின்மேல் போர் முயற்சிகளில்
இறங்கக்கூடாதென்றும் அவர் வலியுறுத்தினார். ஆனால், அவருடைய கருத்து
அரசியலாளரிடையே எடுபடவில்லை. ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன்
ஆங்கிலேயரும் வாணிகப் போட்டியிலும் நாடு பிடிக்கும் போட்டியிலும்
மும்முரமாக ஈடுபடலானார்கள். ஆங்கிலேயர்கள் புலிக்காட்டில் தொழிற்சாலை
ஒன்றை நிறுவ முயன்று தோற்றுப்போயினர். பிறகு மசூலிப்பட்டினத்தில்
1611-ல் ஒரு தொழிற்சாலையை நிறுவினார்கள். கிழக்கிந்தியக் கம்பெனியைச்
சேர்ந்த பிரான்ஸிஸ்டே என்ற ஆங்கிலேயன் சென்னையில் சாந்தோமுக்கு
அண்மையிலேயே செயின்ட் ஜார்ஜ் கோட்டை இப்போது அமைந்துள்ள
அடிநிலத்தை 1639-ல் கம்பெனிக்குச் சொந்தமாக்கிக் கொண்டான்.
சென்னையானது வாணிகத்துக்குத் தக்க இடம் என்ற காரணத்தால் மட்டுமன்றி
வேறு ஓர் எண்ணமும் அவன் நெஞ்சில் அலைபாய்ந்தது. அவனுடைய காதலி
சாந்தோமில் வாழ்ந்து வந்தாள். அவளை அடிக்கடி சந்தித்து அவளுடன்
அளவளாவும் வாய்ப்பும் அவன் முன்னர் நின்று அழைத்தது.