துரதிர்ஷ்டம் டூப்ளேயைத் துரத்திக்கொண்டு வந்தது. அவனுடைய தாய்நாடான பிரான்சில் வெறுப்பும் எதிர்ப்பும் மூண்டன. இந்திய நாட்டில் டூப்ளே கடைப்பிடித்த கொள்கைகளினாலும், கையாண்ட முறைகளினாலும் வீணான மனக்கசப்பும், போராட்டங்களும், பொருள் இழப்பும் விளைந்தன என்று அவன்மேல் குற்றங்கள் சாட்டப்பட்டன. இக்கட்டான அவனுடைய நிலைகளைப் பிரான்சில் யாருமே உணர்ந்து கொள்ளவில்லை. அவனுடைய அறிவு நுட்பத்தையும் திட்பத்தையும் பிரெஞ்சு அரசாங்கம் நன்கு மதிப்பீடு செய்யவில்லை. டூப்ளே பிரான்சுக்குத் திரும்பிப்போகவும், கோடேஹா (Godehew) என்பவன் புதுச்சேரியில் கவர்னர் பதவி ஏற்கவும் ஆணைகள் பறந்தன. கோடேஹா இந்தியாவுக்கு வந்து இறங்கி (1754), டூப்ளேயைப் பதவியிலிருந்து இறக்கி, அவனுடைய கொள்கையையும் தலைகீழாக மாற்றினான் ; ஆங்கிலேயருடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டான். இரு நாட்டினரும் மேற்கொண்டு ஒருவரோடொருவர் போரிடுவதில்லை என்றும், அவரவர்கள் தத்தம் வசம் வைத்திருந்த தேசத்தை அவர்களே வைத்துக்கொள்ளலாம் என்றும், இரு கட்சியினரும் உள்நாட்டு அரசியலில் தலையிட்டுக்கொள்ள கூடாதென்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். மைசூர்ப் போர்கள் மைசூரில் தளவாய் நஞ்சராசன் படையொன்றில் சிப்பாயாகப் பணியாற்றிவந்த ஐதரலி என்பான் வெகுவிரைவில் அரசியல் ஏணியில் ஏறிவிட்டான். கைவன்மையாலும், படைபலத்தாலும், வினைத்திட்பத்தாலும், சூழ்ச்சித் திறனாலும், நெஞ்சுத் துணிவாலும் குறுகிய காலத்தில் மைசூர் அரசாங்கத்தைத் தன் கைக்கீழ்ப் போட்டுக்கொண்டான் (1761). மின்னல் வேகப் படையெடுப்புகளால் தமிழகத்துப் பாளையக்காரர்களை முறியடித்து ஒடுக்கினான். துரித காலத்தில் இவன் அடைந்த அரசியல் ஏற்றம் ஆங்கிலேயருக்கும், மராத்தியருக்கும், நைஜாமுக்கும் அச்சத்தையும் அழுக்காற்றையும் விளைத்தது. ஐதரை எதிர்த்து இம் மூன்று கட்சியினரும் தமக்குள் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டனர். ஆனால், மராத்தியரும் நைஜாமும் ஐதரலியின் இலஞ்சத்துக்கும் சூழ்ச்சிக்கும் வயப்பட்டு ஆங்கிலேயரை விட்டுவிட்டு ஐதரலியுடன் சேர்ந்து கொண்டனர். ஐதரலி கருநாடகத்தின்மேல் படையெடுத்தான். தக்க சமயத்தில் நைஜாம் மீண்டும் கட்சி மாறினான். ஆனால், செங்கண்மாவி (செங்கத்தி)லும் திருவண்ணாமலையிலும் ஐதரலி ஆங்கிலேயரிடம் தோல்வியுற்றான். ஆனாலும் அவன் சளைக்கவில்லை ; |