தொடர்ந்து கருநாடக தேசத்தைக் கலக்கி வந்தான். அவன் மிகப் பெரியதொரு சேனையுடன் சென்னையின் எல்லையில் தோன்றினான் (1769). அவன் போர்க்கோலத்தைக் கண்டு அஞ்சி விதிர்விதிர்க்க ஆங்கிலேயர் அவனுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டு ஆபத்தினின்றும் விடுதலை பெற்றனர். ஐதரலியை யாரேனும் தாக்கினால் அவனுக்குப் படைத் துணை அளிக்கவேண்டுமென்று ஆங்கிலேயர் இவ்வுடன்படிக்கையின்கீழ் ஒப்புக்கொண்டனர். இஃது ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட ஓர் இக்கட்டான நிலைமையாகும். எனினும் 1771-ல் மராத்தியர் ஐதரலியின்மேல் போர்தொடுத்தபோது ஆங்கிலேயர் அவனுக்கு உதவியனுப்பத் தவறினர். ஆபத்தில் தன்னைக் கைவிட்ட ஆங்கிலேயருக்கு எதிராக, நைஜாமுடனும் மராத்தியருடனும் அவன் கூட்டணி யொன்றை அமைத்துக் கொண்டான் (1779). அரபிக்கடற்கரையில் பிரெஞ்சுக்காரருக்குச் சொந்தமான மாஹியை ஆங்கிலேயர் கைப்பற்றிக் கொண்டனர். அந் நிகழ்ச்சியைக் கண்டு ஐதர் வெகுண்டெழுந்தான் ; ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் முரசம் கொட்டினான். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிலவிய அரசியல் அப்போது ஆங்கிலேயருக்குக் கேடு சூழ்வதாகவே இருந்தது. பிரான்ஸ், ஸ்பெயின், ஹாலந்து நாடுகள் ஆகிய யாவும் ஆங்கிலேயரை எதிர்த்து அணிவகுத்து நின்றன. இத்தகைய வாய்ப்பானதொரு சூழ்நிலையை ஆவலுடன் எதிர்நோக்கி நின்ற பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் தாம் இழந்த நாடுகளை மீட்டுக் கொள்வதற்காகத் திட்டமிட்டனர். ஐதரலி 1780 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 90,000 காலாள்களுடனும், 100 பீரங்கிகளுடனும் மைசூர்ப் பீடபூமியினின்றும் வந்து செங்கண்மாக் கணவாயின் வழியாகக் கருநாடகச் சமவெளியின்மேல் இறங்கினான். ஆங்கிலேயக் கம்பெனியின்மேல் அவன் கொண்டிருந்த மாபெருஞ் சினமானது ஊழித் தீயாக மாறிக் கருநாடகத்தைப் பற்றிக்கொண்டது. ஐதரின் சேனைகள் நாடெங்கும் தீ மூட்டின ; தம் வழியில் நேரிட்ட ஊர்கள் அத்தனையையும் சூறையாடின ; குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரையும் படுகொலை செய்தன. ஐதரலியின் வழியில் சிக்குண்ட ஊர்கள், உயிர்கள் யாவும் படுசூரணமாகிக் காற்றில் பறந்தன. அக்கம்பக்கத்து ஊர்களில் வாழ்ந்திருந்த மக்கள் பீதியினால் வீட்டையும் நாட்டையும் கைவிட்டுக் காடுகளிலும் மலைகளிலும் ஓடி மறைந்தார்கள். கர்னல் பெய்லி என்ற ஆங்கிலேயப் படைத் தலைவன் ஒரு படையுடன் ஐதரை எதிர்த்து நின்றான். கொதித்துப் புரண்டுவரும் ஐதரின் சேனைகளின் |