பக்கம் எண் :

468தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

முன்பு அவனுடைய படைப்பலம் செல்லுபடியாகவில்லை. எனினும் வீரத்தோடு
மைசூர் அணிகளை எதிர்த்து நின்று போராடினான். ஐதரின் போர்த்திறனே
மேலோங்கி நின்றது. கர்னல் பெய்லியும் அவனுடைய சிப்பாய்களும் துண்டு
துண்டாக வெட்டுண்டு மாண்டனர். அவனுடைய படை அழிந்து சிதைந்து
போயிற்று (1780). அதற்கு முந்திய ஆண்டு ஆங்கிலேயர் பம்பாயில்
மராத்தியரிடம் பெற்ற படுதோல்வியும், கர்னல் பெய்லின் தோல்வியும்
ஒன்றுசேர்ந்து பிரிட்டிஷ்காரரின் பெருமையை இறக்கித்
தரைமட்டமாக்கிவிட்டன. ஆர்க்காடும் ஐதரின் வசமாயிற்று. எனினும்,
ஆங்கிலேயர் சளைக்கவில்லை. அரசியல் சூழ்ச்சிகளில் கைவந்தவர்களான
அவர்கள் மீண்டும் ஓர் அரசியல் சூதாட்டத்தில் இறங்கினர். அதன்
விளைவாக மராத்தியரும், நைஜாமும் ஐதரலியைக் கைவிட்டனர். கல்கத்தாவில்
ஆங்கிலேயரின் கவர்னர்-ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் என்பவன்
நெஞ்சுத் துணிவுடையவன்; சூழ்நிலைக்கேற்ற உத்திகளைக் கையாள
வல்லவன்; எத்தகைய எதிர்ப்பையும் எந்தவகையான நடவடிக்கைகளை
மேற்கொண்டேனும் பணியவைக்கக் கூடியவன். அவன் சென்னைக்
கவர்னரைப் பதவியினின்றும் விலக்கினான். தன்னால் திரட்டப்படக்கூடிய
அத்தனை சிப்பாய்களையும் அணிவகுத்துச் சர் அயர் கூட் என்னும்
படைத்தலைவன் ஒருவன் தலைமையில் ஐதரின்மேல் ஏவினான். தன்னால்
எவ்வளவு பொருள் கூட்ட முடியுமோ அவ்வளவையும் கூட்டிக் கையில்
ஒப்படைத்தான். சிதம்பரத்தை யடுத்த பறங்கிப்பேட்டையில் பெரும் போர்
விளைந்தது (1781). அப்போரில் ஐதர் படுதோல்வியுற்றான். எனினும்
ஆங்கிலேயரை அச்சுறுத்தி வந்த ஆபத்துகள் முற்றிலும் தீர்ந்தபாடில்லை.
வங்கக் கடற்கரையோரம் பிரெஞ்சுக் கடற்படை ஒன்று சப்ரன் (Admiral
Suffren) தலைமையில் ஆங்கிலேயருடைய கப்பல் தொகுதி களுடன் பல
போர்கள் நிகழ்த்திற்று; கர்னல் பிரைத்வைட் (Braithwaite) தலைமையில்
திரண்டு வந்த ஆங்கிலேயரின் சேனை ஒன்றை ஐதரின் மகன் திப்பு சுல்தான்
முறியடித்தான். எனினும், ஆங்கிலேயர் 1781ஆம் ஆண்டு இறுதிக்குள்
டச்சுக்காரருக்குச் சொந்தமான நாகப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், புலிக்காடு
ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

     ஐதர் தான் தொடர்ந்து நடத்தி வந்த போர்த் தொழிலின் காரணமாக
மிகவும் களைப்புற்றான். அவனைப் பற்றி நின்ற புற்றுநோய் அவனுடைய
உயிரை அணுவணுவாக அரித்து வந்தது. இறுதியாக, 1783 ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம் தன் ஆசைகளை மறந்து இவ்வுலகினின்றே அவன்
விடைபெற்றுக்