பக்கம் எண் :

486தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

ஆங்கிலேயரின் பேழைகளை நிரப்பிவந்தது. இந்தியருடன் பிரிட்டிஷ்
கிழக்கிந்தியக் கம்பெனி மட்டுந்தான் வாணிகம் புரியலாம் என்றும், வேறு
அன்னியர்கள் இந்திய வாணிகத்தில் ஈடுபடலாகாது என்றும் பிரிட்டிஷார்
தடைகள் விதித்து வந்தனராகலின், இந்தியக் குடிமக்களின் தொழில்களும்,
குடிமக்களின் பொருளாதாரமும் பிரிட்டிஷாரின் விருப்பங்கள், தேவைகள்
ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களுக்கும் பிரிட்டிஷ் அரசின் ஆணைகட்கும்
உட்பட்டிருந்தன. அவர்களுடைய ஏகபோக வாணிக உரிமைகள், தமிழ்நாட்டுக்
குடிமக்களுக்குப் பல இன்னல்கள் விளைத்தன. நாட்டில் உயர்தரமான
பருத்தித் துணிகளும் பட்டுத்துணிகளும் ஏராளமாக உற்பத்தி செய்யப்பட்டன.
அவற்றைக் கிழக்கிந்தியக் கம்பெனியானது கொள்முதல் செய்து
இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கும். குறைந்த விலையிலும் குறைந்த கூலியிலும்
தமக்குத் துணிகள் நெய்து கொடுக்கும்படி கம்பெனி வாணிகர்கள் தமிழகத்து
நெசவாளருடன் முன் ஒப்பந்தம் செய்துகொள்ளுவார்கள். பிறகு தமக்குச்
சாதகமாக விலைகள் ஏறியவுடன் நெசவாளர்களைத் துணிகளை நெய்து
கொடுக்கும்படி அவர்கள் வற்புறுத்துவார்கள். நெசவாளர்கள் மறுப்பராயின்
கம்பெனி வாணிகர்கள் அவர்களை நிற்க வைத்துச் சாட்டையால்
அடிப்பதுமுண்டு. அவ்வடிக்குப் பயந்து நெசவாளர்கள் ஒப்பந்தத்தின்படியே
துணிகளை நெய்து கொடுத்துப் பெரு நட்டம் அடைவார்கள். இக்காரணத்தால்
கிராமங்களில் நெசவாளர் குடும்பங்கள் பல முழுகிப் போனதுண்டு. இந்திய
நாடானது வெறும் உழவையே நம்பிப் பிழைத்து வந்தது என்பது வரலாற்றில்
பதிந்துவிட்ட பல பொய்க் கூற்றுகளுள் ஒன்றாகும். உழவானது மிகவும்
சிறப்பானதாகக் கருதப்பட்டு வந்ததென்பது உண்மையேயாம். எனினும், மக்கள்
நல்வாழ்வுக்கு உதவிய ஏனைய தொழில்கள் நூற்றுக் கணக்கில் நாட்டில்
வளமுற்று விளங்கின. கடல் முத்துகள், நறுமணப் பண்டங்கள், சாயச்
சரக்குகள், சர்க்கரை, துணி, அபினி, கஞ்சா, தேக்கு, ஈட்டி, கருங்காலி,
செம்மரம் முதலியன தமிழ்நாட்டில் ஏராளமாக விளைந்தன. இவற்றையும்,
மேலும் பலவகையான காடுதரு பொருள்களையும் ஆங்கிலேயர் இங்குக்
கொள்முதல் செய்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தனர். பொன், செம்பு,
துத்தநாகம், வெள்ளீயம், காரீயம் ஆகிய உலோக வகைகளையும்
குதிரைகளையும், மது வகைகளையும் அவர்கள் தமிழகத்துக்கு இறக்குமதி
செய்தனர். இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதியான சரக்குகளின்
மதிப்பைவிட அங்கிருந்து இந்நாட்டுக்கு இறக்குமதியான சரக்குகளின் மதிப்புக்
குறைவாக இருந்தபடியால் இங்கிலாந்தானது இந்தியாவுக்கு என்றுமே