பக்கம் எண் :

488தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

பொறுப்பை ஆறாயிரம் கல் தொலைவுக்கு அப்பால் அமைந்திருந்து,
நாகரிகம், பண்பாடு, சமயம், மொழி ஆகியவற்றில் இந்தியருடன் முற்றிலும்
முரண்பட்டிருந்த ஒரு நாடு தான் மட்டும் ஏற்றுக்கொண்டு நடத்த
முற்பட்டதை அரசியலிலும், அறிவுத்துறையிலும் முன்னணியில் நின்ற பல
இந்தியர்கள் வன்மையாகக் கடிந்து கொள்ளலானார்கள். பிறகு அவ்வப்போது
இந்திய அரசியல் அமைப்பில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. பிரிட்டிஷ்
நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டம் (1861) ஒன்றின் கீழ்ச் சட்டமும்
விதிகளும் இயற்றிக்கொள்ளும் அதிகாரம் சென்னை அரசாங்கத்திற்கு
வழங்கப்பட்டது.

     அரசாங்க நிருவாகத்தின் அமைப்பில் மேல்நிலையில் அமர்த்தப்
பட்டிருந்தவர்கள் அனைவரும் ஆங்கிலேயராகவே இருந்தனர். பிறகு ‘இந்திய
சிவில் சர்வீஸ்’ (I.C.S) என்ற உயர்பணித் துறையில் ஓரளவு இந்தியருக்கும்
இடம் ஒதுக்கப்படலாயிற்று.

     ரிப்பன் பிரபு வைஸ்ராயாகப் பணியாற்றியபோது அவர் மேற்கொண்ட
ஒரு தீர்மானத்தின் கீழ் (1883-84) உள்நாட்டுக் குடிமக்களும் நாட்டு
அரசாங்கத்தில் பங்குகொள்ளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு
மாவட்டத்துக்கும் ஒரு மாவட்ட போர்டும், தாலுக்காக்கள் ஒவ்வொன்றுக்கும்
ஒரு தாலுக்கா போர்டும் அமைக்கப்பட்டன. இவ் வகைகளின்
உறுப்பினர்களுள் பலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தனர்.
நகரங்களுக்கு நகராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டன. ஏற்கெனவே சென்னை
நகரில், மாநகராட்சி ஒன்று நிறுவப்பட்டுப் பல சட்டங்களின் மூலம் (1841,
1856, 1865, 1867, 1878) அதன் ஆட்சி வரம்பும் பணிகளும்
விரிவாகிக்கொண்டே வந்தன. அம் மாநகராட்சியானது 1867 ஆம் ஆண்டு
வரையில் மூன்று ஆணையர் (Commissioners) கைகளில் ஒப்படைக்கப்
பட்டிருந்தது. அவ்வாண்டில் சென்னை நகரம் எட்டுத் தொகுதிகளாகப்
பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு உறுப்பினரை அரசாங்கமே
நியமித்தது. அடுத்து மேற்கொள்ளப்பட்ட சில சீரமைப்புகளுக்குப் பிறகு
1899ஆம் ஆண்டில் சென்னைக்கு மாநகராட்சி ஒன்று நிறுவப்பட்டது.

     பிரிட்டிஷ் அரசாங்கமானது இந்தியக் குடிமக்களுடன் நேர்முகத்
தொடர்பு மேற்கொண்ட பிறகு நாடு பல துறைகளிலும் துரிதமாக முன்னேறி
வந்தது. முதன் முதல் 1856 ஜூலை மாதம் சென்னை-வாலாஜாபேட்டை
இரயில் பாதை திறக்கப்பட்டது. எட்டாண்டுகளுக்குப் பிறகு இது பெங்களூர்
வரையில் அமைக்கப்பட்டது.