பக்கம் எண் :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் 497

மருத்துவம், கட்டடப் பொறியியல் ஆகியவற்றில் பயிற்சியும், பி.ஏ. பட்டமும்
அளிக்கப்பட்டன (1857-8). அரசாங்க உயர்நிலைப் பள்ளியானது மாநிலக்
கல்லூரியாக உயர்த்தப்பட்டது. ஆங்கில இலக்கியம், விஞ்ஞானம், வரலாறு,
பொருளாதாரம், உளவியல், ஒழுக்கவியல் ஆகிய துறைகளில் பேராசிரியர்கள்
அமர்த்தப்பட்டனர். பொறியியற் கல்லூரி 1834ஆம் ஆண்டிலும், மருத்துவக்
கல்லூரி 1835ஆம் ஆண்டிலும், ஓவியக் கலைப் பள்ளி 1850ஆம் ஆண்டிலும்,
சென்னைக் கிறித்தவக் கல்லூரி 1837ஆம் ஆண்டிலும், பச்சையப்பன் கல்லூரி
1841ஆம் ஆண்டிலும் தொடங்கப்பெற்றன.

     தமிழகத்தில் தொடக்கக் கல்விப் பள்ளிகள் அமைப்பதில் மிகுந்த
ஊக்கம் காட்டியவர்கள் கிறித்தவப் பாதிரிகள் ஆவர். அவர்களுக்குச்
சென்னை அரசாங்கமும் பொருளுதவி வழங்கிற்று. பெண்களுக்கெனத் தனிக்
கல்விக்கூடங்களை நிறுவியர்களும் கிறித்தவப் பாதிரிகளேயாவர். சென்னை
அரசாங்கம் முதன் முதல் 1866ஆம் ஆண்டில் பெண்கள் பள்ளிகளைத்
திறக்கத் தொடங்கிற்று.

     ஆங்கிலக் கல்விப் பயிற்சியினால் இந்திய மக்களுக்கு இரு வகையில்
நன்மை ஏற்பட்டது. முதலாவதாக, இந்திய எல்லைக்குள் அடைபட்டுக் கிடந்த
அவர்கள் ஆங்கில மொழிப் பயிற்சியின் மூலம் வெளி உலகையும் எட்டிப்
பார்க்கலானார்கள். ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெற்ற
பிரெஞ்சுப் புரட்சியும், அமெரிக்கரின் சுதந்தரப் போராட்டமும் சிந்தனையைக்
கிளறிவிட்டன. பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் எழுப்பிய ‘சுதந்தரம், சமத்துவம்,
சகோதரத்துவம்’ என்ற குரல் இந்தியரின் இதயத்திலும் சுதந்தர வேட்கையைத்
தூண்டிவிட்டது. மூடப் பழக்கவழக்கங்களுக்கும், சாதி நீதிகளுக்கும்
கட்டுப்பட்டுக் கிடந்த இந்தியர் விழிப்புற்று எழுந்தனர். அயல்நாட்டவராகிய
ஆங்கிலேயர் தம்மைத் தளையிட்டு ஒடுக்கி வந்ததையும், தம் நாட்டைச்
சூறையாடி வந்ததையும் இந்திய அறிஞர் பலர் உணரலானார்கள். இந்திய நாடு
முழுவதும் ஒரே நாடு என்ற பேருண்மை அவர்களுடைய நெஞ்சில்
உதயமாயிற்று.

     இரண்டாவதாக எதையும் அப்படியே நம்பிவிடாமல் ஆய்ந்து சீர்தூக்கிப்
பார்க்கவேண்டும் என்னும் ஓர் உணர்ச்சியும் படித்த இந்தியரிடம்
ஓங்கிவளரலாயிற்று.