பக்கம் எண் :

498தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

சமயம்

     கிறித்தவப் பாதிரிகள் ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆதரவில் தம் சமய
மாற்றுப் பணியில் விறுவிறுப்படைந்தனர். அவர்கள் இந்து சமயத்தையும்
இந்துக் கடவுளரையும் இழித்துப் பேசி வந்தனர். சைவ வைணவ வாத
எதிர்வாதங்களும், வேதாந்த சித்தாந்தப் பூசல்களும் பெருகின. இவ்
வேறுபாடுகள் ஆங்கிலம் பயின்றவர்கட்கு வெறும் பிள்ளை விளையாட்டாகக்
காணப்பட்டன.

     சென்னையில் முதல் அச்சுக்கூடம் 1711-ல் கிறித்தவப் பாதிரிகளால்
அமைக்கப்பட்டது. அவ் வச்சுக்கூடத்தினின்றும் விவிலிய வேத நூல் புதிய
ஏற்பாட்டின் தமிழ்ப் பதிப்பு ஒன்று வெளியாயிற்று. ‘மதராஸ் கெஜட்’ என்னும்
ஒரு பத்திரிகையும், ‘கூரியர்’ (Courier) என்னும் ஒரு பத்திரிகையும்
அரசாங்கச் செய்திகளை ஏற்றுக்கொண்டு வெளிவந்தன. சென்னையில்
1820ஆம் ஆண்டுக்குப் பிறகு ‘தி கவர்ன்மென்ட் கெஜட்’, ‘தி மதராஸ்
கெஜட்’, ‘தி மெட்ராஸ் கூரியர்’ என்று மூன்று ஆங்கிலப் பத்திரிகைகள்
வெளியிடப்பட்டன. ‘இந்து’ பத்திரிகையின் முதல் பதிப்பு 1878 செப்டம்பர்
20ஆம் நாள் வெளிவந்தது. ‘மதராஸ் மெயில்’ என்னும் ஆங்கிலப்
பத்திரிகையின் முதல் பதிப்பு 1878 டிசம்பர் 14ஆம் நாள் வெளிவந்தது.
‘சுதேசமித்திரன்’ என்னும் தமிழ் நாளேடு 1880-ல் தொடங்கப்பட்டது. இவை
யன்றி வேறு சில ஏடுகளும் செய்தித்தாள்களும் வெளிவந்தன. அச்சுப் பொறி
அறிவின் எல்லையை விரிவடையச் செய்தது.

     வட இந்தியாவில் ராஜா ராம்மோகன்ராய், தேவேந்திர நாத் தாகூர்,
கேசவசந்திர சென், தயானந்த சரசுவதி, இராமகிருஷ்ண பரமஹம்சர்
ஆகியோர் இந்து சமயக் கோட்பாடுகளில் பல அடிப்படையான புரட்சிகரமான
திருத்தங்கள் செய்தனர். இராமகிருஷ்ணரின் தலைமை மாணாக்கரான சுவாமி
விவேகானந்தர் தம் குருவின் கொள்கைகளையும் வேதாந்தக் கருத்துகளையும்
உலகறிய ஓதிவந்தார். ஆங்கிலத்தில் பி. ஏ. பட்டம் பெற்ற இவர் துறவு
பூண்டு வேதாந்த சமயத்துக்கும், மக்களின் அரசியல் விழிப்புக்கும் ஆற்றிய
பணியின் மதிப்பை அளவிட முடியாது. நாளடைவில் இராமகிருஷ்ணர் பேரால்
ஒரு மடம் தொடங்கப்பட்டது. அது இந்தியா முழுவதிலும், உலகில் பல
இடங்களிலும் கிளை மடங்கள் தொடங்கிச் சமயப் பணியும், கல்வி வளர்ச்சி,
மருத்துவ உதவி போன்ற மக்கள் தொண்டுகளையும் செய்து வருகின்றது.