பக்கம் எண் :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் 499

     வடக்கே இராமகிருஷ்ணர் வாழ்ந்திருந்த அதே காலத்தில் தமிழகத்தில்
இராமலிங்க அடிகள் தோன்றிச் சமயத் துறையிலும் சமூகத் துறையிலும் பல
புரட்சிகரமான மாறுதல்களைச் செய்தார். தமிழ் இலக்கியத்துக்குப் புதிய
திருப்பங்கள் கொடுத்துப் பல புதிய படைப்புகளையும் உதவினார். வரலாற்று
ஆசிரியர்கள் எக்காரணத்தாலோ இதுவரையில் இராமலிங்க அடிகளாரின்
சீரிய தொண்டுகளைத் தீர ஆராயாமல் புறக்கணித்து வந்துள்ளனர். அடிகள்
சமய வழக்கில் ஏற்பட்டிருந்த பல தீய சடங்குகளையும், மரபுகளையும் அறவே
ஒழிக்க முயன்றார். புராணங்களையும் சாத்திரங்களையும் வெறுங் கற்பனைகள்
என்றும், அவை அறிவு வளர்ச்சிக்கு இடப்பட்ட தளைகள் என்றும் கூறிக்
‘கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடிப்
பழக்கமெல்லாம் மண்மூடிப்போக’ என்று அவற்றின்மேல் தம் வெறுப்பைக்
கொட்டினார். சமயங்கள் அனைத்தும் ஒரே உண்மையையே வற்புறுத்துகின்றன
வென்றும், அவை மெய்யுணர்வுப் பாதையில் ஏற்றுவிக்கும் பல படிகளாகும்
என்றும் அவர் விளக்கினார். இக் கொள்கையின் அடிப்படையில் அவர்,
‘சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ என்னும் இயக்கம் ஒன்றைத் தோற்றுவித்தார்
(1865). சமரச சன்மார்க்கம் என்னும் ஒருப்பாட்டுக் கொள்கை
திருமந்திரத்திலேயே காணப்படுகின்றது. அதைத் தாயுமானவரும்
விளக்கியிருக்கின்றார். அதை ஓர் இயக்கமாகவே அமைத்தவர் இராமலிங்க
அடிகளார் ஆவார். கோயில் வழிபாட்டில் அவர் செய்துள்ள பெரும் புரட்சி
ஒன்றினைப்போல் உலகில் இதுவரையில் யாருமே செய்ததில்லை.
தென்னார்க்காட்டு மாவட்டத்தில் வடலூர் என்னும் இடத்தில் அவர்
ஞானசபை ஒன்றை அமைத்தார் (1872). அதில் விளக்கு ஒன்றை ஏற்றி
வைத்து அதன் முன்பு ஒளி விதிகளின்படி இழைக்கப்பட்ட கண்ணாடி ஒன்றை
நிறுத்தினார். இக் கண்ணாடியின் அகலம் 120 செ.மீ., உயரம் 180 செ.மீ.
கண்ணாடியை ஏழுவகைத் திரைகளால் மறைத்தார். கண்ணாடிக்கு அடுத்து
உள்ளது கலப்பு நிறத்திரை; அதை யடுத்து ஒன்றுக்குமுன் ஒன்றாக வெண்மை,
பொன்மை, சிவப்பு, பச்சை, நீலம், கறுப்பு ஆகிய வண்ணங்கள் கொண்ட
திரைகளைத் தொங்கவிட்டார். கறுப்புத் திரையில் தொடங்கி ஏழு
திரைகளையும் ஒவ்வொன்றாக விலக்கினால் விளக்கின் ‘சோதி’ பளபளவென்று
கண்ணுக்குத் தெரியும். உயிர்கள் ஏழுவகையான மறைப்புக்கு
உட்பட்டுள்ளனவென்றும், திரை மறைப்பெல்லாம் தீர்ந்துவிடுமாயின்
அருட்பெருஞ்சோதியான இறைவன் காட்சியளிப்பான் என்னும்
தத்துவத்தையும் ஞான சபையின் அமைப்பானது விளக்கிக்காட்டிற்று. ஆண்டு
தோறும் தை மாதம் பூசநாள் அன்று இந்த ஏழு திரைகளையும்