விலக்கி, சோதி தரிசனம் காட்டப்பட்டு வருகின்றது. அடிகளார் நோய்களுள் மிகக் கொடிய நோய் பசிநோய் என்று உணர்ந்து, சாதி, குலம், சமயம் ஆகிய வேறுபாடுகளைக் கருதாமல் ஏழைகளின் பசிக்கு உணவு அளிப்பதற்காக வடலூரில் கூழ்ச்சாலை ஒன்று நிறுவினார் (1867). அன்று அவர் ஏற்றிய அடுப்பு இன்றும் எரிந்துகொண்டே இருக்கிறது. பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் பிராமணருக்கு மட்டுமே அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பதும், பெருந் தொகையில் ஏழை எளியவர் அனைவரும் உண்டு பசியாறும் ஏற்பாட்டைச் செய்தவர் முதன்முதல் அடிகளார் தாம் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கன. உலகில் உயிர்களுக்கு உறும் எல்லா ஊறுகளையும் தவிர்ப்பதே ஒருவர் மேற்கொள்ள வேண்டிய கடமையாக இருக்கவேண்டுமென்றும், அந்த நோன்பைத் தவறாமல் மேற்கொண்டு ஒழுகுவார் இறப்பையும் வெல்லலாம் என்றும் அவர் எடுத்துக் கூறிவந்தார். ‘கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிர்உண்ணுங் கூற்று’ என்னுந் திருக்குறள் காட்டிய உண்மையை அவர் ஓயாமல் வற்புறுத்தி வந்தார். அவரே வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர். எனவே, உயிர்களிடத்துக் காட்டும் அன்பில் மிக உயர்நிலையை எட்டியிருந்தார். இராமலிங்க அடிகளார் தென்னார்க்காட்டு மாவட்டத்தில் சிதம்பரத்துக்கு அண்மையில் உள்ள மருதூரில் (1823 அக்டோபர் 5ஆம் நாள்) கருணீகர் குலத்தில் பிறந்தார். அவருடைய இளமை சென்னையில் கழிந்தது. அவர் ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்னும் அழகிய உரைநடை நூல் ஒன்றை 1854-ல் எழுதி வெளியிட்டார். அப்போது அவரைப் பல அறிஞர் சூழ்ந்தனர். அவர்களுள் தலையாயவர் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராய் இருந்த தொழுவூர் வேலாயுத முதலியார் ஆவார். இவர் அடிகளாரிடம் நெருங்கிய அன்பு பூண்டு அவர் எழுதி வந்த பாடல்களைத் தொகுத்துத் ‘திருவருட்பா’ என்னும் பெயரில் ஒன்றை வெளியிட்டார். அந் நூல் ஆறு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளது. முதல் நான்கு திருமுறைகள் 1867-ல் வெளிவந்தன. இராமலிங்க அடிகளார் பதினாறு ஆண்டுகள் (1858-1874) கருங்குழி என்னும் சிற்றூரில் தங்கியிருந்தார். அப்போதுதான் ‘அருட்பெருஞ் சோதி அகவல்’ என்னும் அவருடைய பாடல் இயற்றப்பட்டது. அது 1596 அடிகளால் ஆனது; ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலக்கியப் படைப்புகளில் ஈடிணையற்று மிக உயர்ந்த நிலையில் நின்று ஒளிர்பவர் |