பக்கம் எண் :

502தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

தத்தம் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். தமிழ்ப் புலவர்கள் பலர் தோன்றித்
தமிழை வளர்த்தார்கள். எழுதுவதற்குக் காகிதமும், நூல்கள் வெளியிட அச்சுப்
பொறியும் கிடைத்த பிறகு தமிழ் நூலாசிரியரின் பணியிலும் முன்னேற்றம்
காணப்பட்டது. ஆங்கில மொழிப்பயிற்சி ஏற்பட்ட பின்பு தமிழ் இலக்கியப்
படைப்புகளில் பல புதுமைகள் நுழைந்தன. உரைநடை புதிய வடிவில்
உருவாயிற்று. ஏற்கெனவே சிலப்பதிகாரத்திலும் உரைகளிலும் உரைநடை
கையாளப்பட்டு வந்ததாயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த உரை,
காலத்தைத் தழுவி எழுந்ததாகும். இராமலிங்க அடிகளார், ஆறுமுக நாவலர்,
தியாகராசச் செட்டியார் முதலியோர் உரைநடையைத் தொடக்கி வைத்தனர்.
பழங்கால உரையானது நீண்ட சொற்றொடர்களால் ஆக்கப்பட்டிருந்தது.
ஐரோப்பியர் வருகைக்குப் பின்பு உரைகள் சிறுசிறு சொற்றொடர்களினால்
அமையலாயின. ஒரு தொடருக்கும் அடுத்ததற்கும் இடையே இடைவெளி
விடுவதும், முற்றுப்புள்ளி, காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி,
மேற்கோற் புள்ளிகள் ஆகியவற்றை அமைப்பதும் பழக்கத்துக்கு வந்தன.
உரை பல பத்திகளாகவும் எழுதப்பட்டது. வேதநாயகம் பிள்ளை எழுதிய
‘பிரதாப முதலியார் சரித்திரமும்’, இராசம் ஐயரின் ‘கமலாம்பாள் சரித்திரமும்’
பிற்காலத்தில் எழவிருந்த நூற்றுக்கணக்கான தமிழ் நாவல்களுக்கு
வழிவகுத்துக் கொடுத்தன. இவையன்றி வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி
எழுதிய ‘மதிவாணன்’, மாதவய்யா எழுதிய ‘பத்மாவதி’, சரவணம் பிள்ளை
எழுதிய ‘மோகனாங்கி’ ஆகியவையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின்
படைப்புகளாம். இலக்கியம் பயிலாத பொதுமக்களுக்கெனப் பல உரைநடை
நூல்கள் எழுந்தன. மகாபாரதம், இராமாயணம், பாகவதம், விக்கிரமாதித்தன்
கதை, பன்னிரண்டு மந்திரி கதை, அரபிக் கதைகள் ஆகியவை மக்கள் பேசும்
எளிய நடையில் எழுதப்பட்டன.

     செய்யுள் நடையில் தலபுராணங்கள் பல வெளியாயின. திரிசிபுரம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் மாபெரும் புலவராகப் பெரும் புலவர்கள்
போற்ற வாழ்ந்தவர். அவர் பல தலபுராணங்கள் இயற்றினார். வல்லூர்
தேவராசப்பிள்ளை ‘குசேலோபாக்கியானம்’ என்னும் நூலை நெஞ்சு
நெகிழ்விக்கும் தெள்ளுதமிழில் பாடினார். கிருஷ்ணபிள்ளை என்ற கிறித்தவப்
புலவர் கிறித்தவ சமயக் காவியம் ஒன்றைப் பாடினார். இக்காவியம் ஜான்
பன்யன் (John Bunyan) என்ற ஆங்கில ஆசிரியர் எழுதிய ‘வாழ்க்கைப்
பயணியின் போக்கு’ (Pilgrim’s Progress)