பக்கம் எண் :

பண்டைய தமிழரின் அயல்நாட்டுத் தொடர்கள் 71

3ஆம் நூற்றாண்டில் நடைபெற்று வந்ததாக ஹாதீகும்பாக் கல்வெட்டு ஒன்று
(கி.மு. 2ஆம் நூற்றாண்டு) தெரிவிக்கின்றது. மோரிய பரம்பரையினர்
ஆட்சியின் தொடக்கத்திலேயே இக்கூட்டுறவு அமைக்கப்பட்டிருந்தது போலும்.
மோரியரின் படையெடுப்பை இக்கூட்டுறவு கடுமையாய் எதிர்த்து நின்றது.
ஆனால், கோசருக்குத் துணையாக மோரியர் தமிழகத்தின்மேல் படையெடுத்து
வந்து மோகூர்ப் பழையனால் முறியடிக்கப்பட்டபோது இக் கூட்டுறவு
செயற்பட்டு வந்ததா என அறிய முடியவில்லை.

     அசோகர் வடக்கே ஆண்ட காலத்திலேயே பௌத்தமும் ஆரியப்
பண்பாடுகளும் தமிழகத்தில் ஆங்காங்கு புகுந்து பரவத் தொடங்கின
வாகையால் ஆரிய தமிழ் மொழிகளுக்குள் ஏற்பட்ட கலப்பினால் பிராகிருதம்
என்ற புதுமொழி ஒன்று உருவாயிற்று. இப்போது திராவிட மொழிகள்
வழங்கும் இடங்கள் யாவற்றிலும் பிராகிருத மொழி பரவி வந்தது.

     பண்டைய தமிழகத்தில் சங்க காலம் நடைபெற்றுக் கொண்டிருந்த
போது தமிழகத்தின் வடக்கிலும், வடமேற்கிலும் சாதவாகனர் செழிப்புடன்
விளங்கினர். இவர்கள் அரசியல் அமைப்பிலும் நிருவாகத்திலும் சிறந்து
விளங்கியவர்கள். இவர்களுடன் வாணிகம் செய்யவந்த சாகர்களும்
கிரேக்கர்களும் இவர்களுடனே தங்கித் தாமும் இவர்களுடைய பழக்க
வழக்கங்களை மேற்கொண்டனர்.