பக்கம் எண் :

72

                 6. தமிழ் வளர்த்த சங்கம்

     வரலாற்றின் உயிர்நாடி காலக்கணிப்பாகும். இன்ன ஆண்டில், இன்ன
திங்களில், இன்ன நாளில் இன்னது நிகழ்ந்தது என்று கூறுதல் வரலாற்றின்
இலக்கணமாகும். பண்டைய தமிழக வரலாற்றில் பல நிகழ்ச்சிகளுக்குக்
காலங்கணித்தல் எளிதாகத் தோன்றவில்லை. மன்னர்களைத் தம் பாடல்களில்
குறிப்பிடும் பழந்தமிழ்ப் புலவர்கள் அம் மன்னர்கள் வாழ்ந்திருந்த
காலத்தைத் தெரிவிப்பதில்லை. அவர்களுடைய செய்யுள்களில் விளக்கப்படும்
சில நிகழ்ச்சிகளைக் காலங்கணிக்கப்பட்ட வேறு நிகழ்ச்சிகளுடன்
தொடர்புறுத்தி அவற்றின் காலத்தை ஒருவாறு அறுதியிட வேண்டியுள்ளது.

     பண்டைய தமிழகத்தின் வரலாற்றை அறிவதற்குத் துணைபுரியும்
புறச்சான்றுகள் வெகு சிலவே. எனவே, அகச்சான்றுகளை நாடும் தேவை
நேரிடுகின்றது. இவ் வகச்சான்றுகள் அத்தனையும் சங்க இலக்கியங்களுக்குள்
கிடைக்கின்றன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் தொகைகளில்
சேர்க்கப்பட்டுள்ள இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் எனப் பெயர்
பெற்றுள்ளன. தொல்காப்பியம், பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் சில,
மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியவற்றையும் சங்க இலக்கியங்களாகவே
சேர்த்து எண்ணுவதுண்டு.

     பண்டைய தமிழகத்தில் தமிழ்ப் புலவர்கள் கூடித் தலை, இடை, கடை
என மூன்று சங்கங்கள் கூட்டி அவற்றில் அமர்ந்து தமிழ் வளர்த்தார்கள்
என்று கூறுவது மரபாக இருந்து வருகின்றது. கடைச்சங்க காலத்தில்
எழுந்தவையே எட்டுத் தொகை, பத்துப்பாட்டு நூல்கள் எனக் கொள்ளுவதும்
தமிழகத்தில் வழக்கமாய் இருந்து வருகின்றது. பொதுவாகச் சங்கம் என்னும்
சொல்லானது கடைச் சங்கத்தையே குறித்து நிற்கும்.

     சங்கம் என்னும் சொல் தமிழ் அன்று என்றும் வடமொழிச் சொல்லின்
மரூஉ என்றும் கூறுவர் சிலர். எனவே, தமிழ்நாட்டில் வடமொழி
இடங்கொண்ட பிறகே சங்கம் தோன்றியது என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
இக் கருத்துப் பிழைப்பட்டதாகும்.