இதற்குப் போதிய சான்றுகள் இல. பண்டைய காலந்தொட்டுத் தமிழகத்தில் நேர்ந்துள்ள மொழிப் புரட்சிகள் பண்பாட்டுப் புரட்சிகள் பலவற்றினால் பல தமிழ்ப் பெயர்கள் சிதைந்தும் மறைந்தும் போய்விட்டன. அவற்றுக்கேற்ப வடமொழிச் சொற்கள் அமையலாயின. ஆரிய நாகரிகம் தமிழகத்தில் வேரூன்றிப் பரவி வரும்போது ஏற்பட்ட விளைவு இது. ஆகவே, சங்கம் என்னும் சொல் பிற்காலத்தையதொன்றாக இருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. இதற்கு நேரான தமிழ்ச் சொற்கள் உண்டு, கூடல், அவை, மன்றம் ஆகியவை சங்கத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாம். தமிழ்ச் சங்கம் அல்லது கூடல் வளர்ந்த இடமாகிய மதுரையானது கூடல் என்னும் பெயராலும் வழங்கி வருகின்றது. இஃது இடவாகு பெயர். தமிழ வளர்ந்த கூடலைத் ‘தமிழ் கெழுகூடல்’ என்று புறப்பாட்டு ஒன்று குறிப்பிடுகின்றது.1 சங்கம் என்னும் பெயர் ஏற்படுவதற்கு முன்பு கூடல் என்னும் சொல்லே வழங்கியிருக்க வேண்டும். சமணரும் பௌத்தரும் தத்தம் சமயங்களை வளர்ப்பதற்காகச் சங்கங்கள் நிறுவினார்கள். மதுரையில் நடைபெற்று வந்த கூடலை முதன்முதல் அவர்களே சங்கம் என்று பெயரிட்டழைத்திருக்கக்கூடும். வைதிக ஆரியரும், சமணரும், பௌத்தரும் தமிழகத்தில் நுழைந்த பிறகு ஏற்பட்ட ஆயிரக்கணக்கான பெயர் மாற்றங்களுள் இஃதும் ஒன்றாக இருக்கவேண்டும். சங்க இலக்கியம் ஒன்றிலேனும் ‘சங்கம்’ என்னும் சொல் காணப்பட வில்லை என்பது உண்மையே. இதற்குத் தக்கதொரு காரணமும் உண்டு. இக் காலத்தில் நூல் இயற்றும் ஆசிரியர் ஒருவர் ‘நான் இந்நூலை, இன்ன இடத்தில், இன்ன பல்கலைக்கழகம் நிகழும்பொழுது ஆக்கினேன்’ என்று கூறித் தம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளும் மரபு இல்லை. இச் செய்திகளை நாம் அறிய வேண்டுமாயின் நூல் அச்சிடப்பட்ட ஊர், காலம் இவற்றைக் காட்டும் ஏட்டைத் திருப்பிப் பார்க்கவேண்டும். பண்டைய புலவர்களும் இம் முறையைப் பின்பற்றி வந்தனர். தனிப்பாடலாசிரியரோ, நூலாசிரியரோ, தொகுப்பாசிரியரோ இன்ன ஊரில், இன்ன காலத்தில்தாம் தம் பாட்டையோ, நூலையோ, தொகுப்பையோ படைத்ததாகக் குறிப்பிடும் வழக்கத்தை மேற்கொண்டிலர். இக் காரணத்தினாலேயே சங்கம், கூடல், மன்றம் என்னும் சொற்கள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. அன்றி, இப்பெயர்கள் அடங்கியிருந்த 1. புறம். 58. |