பாடல்களோ, நூல்களோ அழிந்து போயிருக்கக்கூடும் ; அல்லது அழிக்கப்பட்டிருக்கவுங்கூடும். தமிழ்ச் சங்கத்தைப் பற்றிய குறிப்புகள் இறையனார் களவியல் உரையிற்றான் முதன்முதல் காணப்படுகின்றன. தலை, இடை, கடைச் சங்கங்களின் வரலாற்றை அவ்வுரை சுருக்கிக் கூறுகின்றது. அவ் வரலாற்றைப் பிற்கால உரையாசிரியர்களான பேராசிரியரும் அடியார்க்கு நல்லாரும் ஒப்புக்கொண்டுள்ளனர். மூன்று சங்கங்கள் பல்வேறு காலங்களில் மதுரையில் தமிழ் வளர்த்த வரலாற்றைப் பல புராண ஆசிரியரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியர் பரஞ்சோதியடிகள் தம் நூலில் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிப் பாடியுள்ளார். வில்லிப்புத்தூரார் 15 ஆம் நூற்றாண்டினர். அவர் தாம் பாடிய பாரதத்தில், ‘நன்றறிவார் வீற்றிருக்கும் நன்மாடக் கூடல்’, என்று மதுரையைப் புகழ்கின்றார். தமிழ் வளர்க்கும் சீரிய நோக்கத்துடன் பண்டைய காலத்துப் பாண்டிய மன்னர்கள் தமிழ் புலவர் பலரையும் ஒன்று கூட்டித் தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழுக்கு ஏற்றம் புரிவித்தார்கள் என்பதும், இவ்வாறே சங்கம் தோற்றுவிக்கப்பட்டது என்பதும், இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் கூறும் செய்தியாகும். அஃதுடன் அவர் மேலும் சில விளக்கங்களையும் அளிக்கின்றார். அவையாவன; கடல்கொண்ட தென்மதுரையில் முதற் சங்கம் நடைபெற்று வந்தது. சிவபெருமான், அகத்தியனார், முருகக் கடவுள், முரஞ்சியூர் முடிநாகனார், குபேரன் முதலாய ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர் அதன்கண் அமர்ந்து தமிழ் வளர்த்தனர். அச் சங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த புலவர்களின் தொகை மொத்தம் 4449 ஆகும். அவர்கள் பரிபாடல்கள் பலவற்றையும், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை என்ற நூல்களையும் இயற்றினார்கள். இத் தலைச்சங்கம் தொடர்ந்து 4440 ஆண்டுகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாகப் பாண்டிய மன்னர் எண்பத்தொன்பதின்மர் இச் சங்கத்தைப் புரந்து வந்தார்கள். அவர்களுள் எழுவர் தாமே பெரும் புலவர்களாகவும் திகழ்ந்தவர்கள். அக்காலத்தில் வழங்கிய இலக்கண நூல் அகத்தியம் ஒன்றேயாம். இடைச் சங்கம் தோன்றி வளர்ந்தது கபாடபுரத்தில். தென்மதுரை கடல் கோளுக்குள்ளாயிற்று; கபாடபுரம் பாண்டி நாட்டுக்குத் தலைநகரமாயிற்று. இடைச்சங்கம் அங்கு நிறுவப் பட்டது. வெண்டேர்ச்செழியன் முதலாக, முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் பாண்டிய மன்னர்கள் இச் |