சங்கத்தின் புரவலர்களாய் பணியாற்றினார்கள். அவர்களுள் ஐவர் தாமே புலவர்களாகவும் அச்சங்கத்தில் அமர்ந்திருந்தனர். அகத்தியனார், தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழியார், மோசியார், வெள்ளூர்க் காப்பியனார், சிறுபாண்டரங்கனார், திரையன் மாறனார், துவரைக்கோன், கீரந்தையார் முதலாய ஐம்பத்தொன்பதின்மர் இச்சங்கத்தில் அமர்ந்து தமிழாராய்ந்தார்கள். இந்தக் கூடலில் வீற்றிருந்த புலவர்கள் மூவாயிரத்து எழுநூற்றுவர். கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் முதலிய நூல்களை அவர்கள் பாடினார்கள். அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், இசை நுணுக்கம், பூதபுராணம் ஆகிய இலக்கண நூல்களை அவர்கள் பயன்படுத்தி வந்தார்கள். இச் சங்கம் மூவாயிரம் ஆண்டுகள் நடைபெற்றதெனவும் கூறப்பட்டுள்ளது. பிறகு கபாடபுரத்தையும் கடல் கொண்டுபோய்விட்டது. இக் காரணத்தினால் கடைச் சங்கம் உத்தர மதுரையில் கூடிற்று. இப்போது பாண்டி நாட்டிலுள்ள மதுரை இதுதான். இச் சங்கத்தில் அமர்ந்து தமிழ் வளர்த்த புலவர்கள் நாற்பத்தொன்பதின்மர். இவர்களுள் மூவர் பாண்டிய மன்னர். சேந்தம்பூதனார், அறிவுடையரனர், பெருங்குன்றூர் கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிளநாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆகியவர்கள் ஏனைய புலவர்களில் சிலர். இந் நாற்பத்தொன்பதின்மர் பாடிய பாடல்கள் நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, கலி நூற்றைம்பது, பரிபாடல் எழுபது, கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலியன. கடைச்சங்க காலத்தில் வழங்கிய இலக்கண நூல்கள் அகத்தியமும் தொல்காப்பியமுமாம். இச்சங்கம் 1850 ஆண்டுக் காலம் நீடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இக் கடைச்சங்கத்தை மதுரையில் நிறுவியவன் பாண்டியன் முடத்திருமாறன் என்பான். இதன் இறுதி யாண்டுகளில் அரசாண்டவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி. கடைச் சங்கத்தின் தோற்றத்தைப்பற்றிய செய்தியை இறையனார் களவியல் உரையாசிரியரே அன்றித் திருவிளையாடற் புராணம் எழுதிய பரஞ்சோதி யடிகளும் தம் நூலில் விரித்துரைக்கின்றார். அவர் கூறுவதாவது; முன்னொரு காலத்தில் வங்கிய சேகர மன்னன் என்பவன் பாண்டி நாட்டை ஆண்டு வந்தான். அப்போது வாரணாசியில் பிரமதேவன் பத்து அசுவமேத யாகங்களை முடித்துக்கொண்டு கங்கையாற்றில் தன் |