பக்கம் எண் :

76தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

மனைவியர் சரசுவதி, காயத்திரி, சாவித்திரி ஆகிய மூவருடன் நீராடச்
சென்றான். கந்தருவப் பெண் ஒருத்தியின் இன்னிசையில் தன் உளத்தைப்
பறிகொடுத்த சரசுவதிதேவி சற்றுப் பின் தங்கினாள். அவளை மானிடப் பிறவி
எடுக்குமாறு பிரமன் சபித்தான். கலைமகள் தன் பிழையை மன்னித்துத்
தனக்குச் சாப விடுதலையளிக்கும்படி தன் கணவனிடம் மன்றாடினாள்.
நான்முகக் கடவுளும் உளமிரங்கி அருள்சுரந்து தன் சாபத்துக்குக் கழுவாய்
ஒன்று கூறினான். அஃதென்னவெனின், கலைமகளின் உடல் ஐம்பத்தொரு
எழுத்தால் ஆனது. அவற்றுள் ‘ஆ’ முதல் ‘ஹக’ வரையிலான நாற்பத்தெட்டு
எழுத்துகள் உலகில் புலமை மிக்க சான்றோர்களாய்ப் பிறப்பார்கள்.
அவ்வெழுத்துகள் யாவற்றினுள்ளும் ஊர்ந்து நின்று அவற்றைச் செலுத்தி
வருகின்ற ‘அகரம்’ போன்றவனான சிவபெருமான் நாற்பத்தொன்பதாம்
புலவராக வீற்றிருந்து அப் புலவர்கட்குப் புலமையை வளர்த்து முத்தமிழையும்
நிலைநிறுத்துவான். இவ்வாறு கூறிப் பிரமன் கலைமகளைத் தேற்றினான்.2

     ‘இறையனார் களவியல்’ என்னும் அகப்பொருள் இலக்கணம்
இயற்றப்பட்ட வரலாறு பின்வருமாறு: பாண்டி நாட்டில் பன்னிரண்டு
ஆண்டுகள் மாபெரும் பஞ்சம் ஒன்று தோன்றி மக்கள் அவலப்பட்டனர்;
உணவின்றிப் பசியினால் வாடினர். அவர்களுடைய துன்பத்தைக் கண்டு
உள்ளமுடைந்த பாண்டியன் கேட்டுக்கொண்டபடியே அவனுடைய அவைப்
புலவர்கள் அனைவரும் பாண்டி நாட்டைத் துறந்து சென்று தத்தமக்கு
விருப்பமான ஊர்களில் தங்கிக் காலங்கழித்து வந்தனர். பன்னிரண்
டாண்டுகள் கழித்துப் பாண்டி நாட்டில் நன்மழை பெய்தது; பயிர்கள்
செழிப்புற்றன. மக்களும் நல்வாழ்வு எய்தினர். மன்னனும் உளமகிழ்ந்து
புலவர்கள் அனைவரையும் தேடித் தன் அவைக்கு மீண்டும் அழைத்து
வருமாறு பல இடங்களுக்கும் ஆள் போக்கினான். ஆள்கள் பல்வேறு
இடங்களிலும் தேடித் திரிந்து புலவர்களைத் திரட்டிக் கொண்டுவந்து
சேர்த்தனர். ஆனால், திரும்பி வந்த புலவர்கள் அனைவரும் எழுத்து, சொல்
இலக்கணங்களில் மட்டும் வல்லுநராகக் காணப்பட்டனரே யன்றிப் பொருள்
இலக்கணத்தில் தேர்வுடையவர் அவர்களுள் ஒருவரேனும் இலராயினர்.
மன்னன் பெரிதும் கவன்றான். பொருளை யாய்ந்து வாழ்க்கையிற் பயன்
பெறுவதற்காகவே எழுத்தும் சொல்லும் உள்ளன. எனவே, பொருளை
உணர்த்தும் இலக்கணத்தை மீண்டும் மக்கள் யாரிடம் கற்றுப் பயன் பெறுவர்

     2. திருவிளையாடல் (பரஞ்சோதி)-படலம் 51. பாடல் 10-11.