பக்கம் எண் :

தமிழ் வளர்த்த சங்கம் 77

என்று மன்னன் ஏங்கி நின்றான். அவனுடைய கவற்சிக்கு இரங்கியவனாய்
ஆலவாய்க் கடவுள் அகப்பொருளை விளக்கும் அறுபது சூத்திரங்களை
மூன்று செப்பேடுகளின்மேல் பொறித்துக் கோயிற் கருவறையில் தன்
பீடத்தின்கீழ் இட்டு வைத்தான். கோயில் அருச்சகன் அவ் வேடுகளைக்
கண்டெடுத்து மன்னன் கைகளில் சேர்த்தான். அவற்றைப் பெற்று அளவற்ற
மகிழ்ச்சியில் ஆழ்ந்த பாண்டியன் அச்சூத்திரங்கட்கு உரைகாண முயன்றான்.
நக்கீரனார் அவற்றுக்குச் சிறப்பானதொரு உரையை இயற்றிக் கொடுத்தார்.
முருகப் பெருமானின் கூறான உருத்திரசன்மன் என்பான் இவ்வுரையை
அரங்கேற்றக் கேட்டு மகிழ்ந்தான். இறையனார் அகப்பொருள் நூன்முகம்
தெரிவிக்கும் வரலாறு இது. இவ் வரலாறு கல்லாடத்தின் மூன்றாம் பாடலிலும்
குறிப்பிடப்படுகின்றது.

     தமிழ்ச் சங்கங்கள் மூன்றும் தோன்றி வளர்ந்த வரலாறும், இறையனார்
அகப்பொருளும் அதன் உரையும் எழுந்த வரலாறும், தெய்வீக நிகழ்ச்சிகள்,
அளவைக்கு ஒவ்வாத கால வரைகள் ஆகியவை கலந்துள்ளன என்பது
உண்மை. எனினும், அவற்றை முற்றிலும் கற்பனை என்று புறக்கணித்தலாகாது.
‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது
அறிவு’3 என்பது நியதி. எனவே, இப்புராண வரலாறுகளை நன்கு ஆய்ந்து
அவற்றுள் உண்மை காணலே பொறுத்தமாகும்.

     பரஞ்சோதி யடிகளின் காலம் இன்னதெனத் திட்டமாக அறிய
முடியவில்லை. இவரன்றிப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவரும் ஒரு
திருவிளையாடற் புராணம் பாடியுள்ளார். இவர் 13ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர். பரஞ்சோதியடிகள் காலத்தால் இவருக்குப் பிற்பட்டவர். தமிழ்ச்
சங்கத்தைப்பற்றிக் கூறும் புராணங்கள் இவை இரண்டுதாம். மன்னர்களின்
பரம்பரை வரிசையிலும், அறுபத்து நான்கு திருவிளையாடல்களின் வைப்பு
முறையிலும் இவ் விரண்டு புராணங்களும் ஒன்றோடொன்று முரண்படுகின்றன.
இறையனார் களவியல் உரை இவை இரண்டுக்கும் முற்பட்டதாகும். இப்
புராணங்களின் கூற்றுக்கும், களவியல் உரையாசிரியர் தரும்
செய்திகளுக்குமிடையே பல வேறுபாடுகள் உண்டு. எனவே, புராண ஆசிரியர்
இருவரும், களவியல் உரையாசிரியரும் அவ்வக் காலங்களில் தத்தமக்குக்
கிடைத்த குறிப்புகளைக் கொண்டு தமிழ்ச் சங்கங்களைப்

     3. குறள். 355.