பற்றிய செய்திகளைத் தத்தம் நூல்களில் சேர்த்திருக்க வேண்டும். பல வேறு காலங்களில் தமிழ்ச் சங்கங்களைப்பற்றிய செய்திகள் மறைந்து போகாமல் செவிவழித் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன என்று ஊகிக்க இடமேற்படுகின்றது. கற்பனைக் கதைகளும், செய்தித்தாள்களும் செய்திகளைத் திரட்டித்தராத ஒரு காலத்தில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு வரலாற்றை முற்றிலும் கற்பனை என்று புறக்கணித்து விடல் பேதைமையாம். எனவே, தமிழ்ச் சங்கங்களைப்பற்றிய செய்திகட்கு ஓர் அடிப்படை இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறலாம். தமிழ்ச் சங்கங்களைப் பற்றிய வரலாறுகளில் வரும் மன்னர்கள், புலவர்கள் ஆகியவர்களுள் பலர் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. அதனால் அப் புலவர்கள் உயிருடன் வாழ்ந்திருந்தவர்கள்; புனைபாத்திரங்கள் அல்லர் என்பதை மறுக்க முடியாது. பாண்டிய மன்னர் அவையின் பல புலவர்கள் வீற்றிருந்த வரலாற்றை வேள்விக்குடிச் செப்பேடுகளும்4 குறிப்பிடுகின்றன. கற்பனை வளம் செறிந்த வர்கள் உண்மை வரலாற்றுடன் பல பொய்க் கதைகளையும் சேர்த்துத் திரிந்து வெளியிட்ட செய்திகள் பண்டைய நூல்கள் பலவற்றுள் இடம் பெற்றுவிட்டன. எனவே, தமிழ்ச் சங்கம் என்று பிற்காலத்தில் பெயரெய்திய கூடல் அல்லது மன்றம் ஒன்று பாண்டிய மன்னர் தலைமையில் இயங்கி வந்த வரலாற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஐயமில்லை. அடுத்துத் தமிழ் வளர்த்த சங்கம் எத்தனை, ஒன்றா, மூன்றா என்பதை ஆய்வோம். கபாடபுரம் பாண்டியனுடைய தலைநகராய் இருந்து பிறகு தென்மதுரை தலைநகராக மாறியதற்கு இராமாயணம், மகாபாரதம், கௌடில்யரின் அர்த்த சாத்திரம் ஆகிய நூல்களில் சான்றுகள் கிடைக்கின்றன. கன்னியாகுமரிக்குத் தெற்கில் துறைமுகம் ஒன்று இருந்ததாகப் பிளினி கூறுகின்றார். ‘மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின், மெலிவு இன்றி மேற்சென்று மேவார்நாடு இடம்படப் புலியொடு வில்நீக்கிப் புகழ் பொறித்த தென்னவன்’5 என்று முல்லைக் கலியிலும், ‘பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள, வடதிசைக் கங்கையுங் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன்’6 என்று சிலப்பதிகாரத்திலும் 4. எபி. இந்தி xvii- க். 16. 5. முல்லைக்கலி - 4 : 1-4 6. சிலப். 11-19, 22 |