பக்கம் எண் :

தமிழ் வளர்த்த சங்கம் 79

இதைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இவற்றின் அடிப்படையில்
நோக்கின் வடமதுரையானது பாண்டி நாட்டின் தலைநகராவதற்கு முன்பு
பாண்டியர்கள் அதற்குத் தென்பால் கபாடபுரத்தில் அமர்ந்தும், அதற்கும்
முன்பு, மேலும் தெற்கில் அமைந்திருந்த தென்மதுரையிலிருந்தும் ஆட்சி
புரிந்து வந்தனர் என்ற வரலாறு உண்மை என்பது உறுதியாகின்றது.

     தென்மதுரை ஒன்று செயற்பட்டு வந்ததற்குப் புறச்சான்று வேறொன்றும்
உண்டு. இலங்கையின் வரலாற்றைக் கூறும் ‘மகாவமிசம்’ என்னும் நூலில் அந்
நகரம் குறிப்பிடப்படுகின்றது. விஜயன் என்னும் மன்னனும் அவன்
தோழர்களும் அங்கிருந்துதான் தமக்கு மணப்பெண்கள் தேடிப் பெற்றனராம்.
சிங்கள மொழியில் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ‘சத்
தர்மாலங்காரம்’ என்னும் நூலிலும் ‘தட்சிண மதுரான்’ என்ற ஒரு குறிப்புக்
காணப்படுகின்றது.

     பாண்டி நாட்டின் தலைநகரம் இருமுறை மாற்றப்பட்டிருப்பினும்,
மாறியமைந்த நகரங்களில் மீண்டும் மீண்டும் தமிழ்ச்சங்கம் ஒன்றைப் புதிதாக
நிறுவியதன் காரணம் காண இயலாது. எனினும் செவிவழிச் செய்திகளும், தமிழ்
இலக்கியங்களில் காணக் கிடைக்கும் அகச்சான்றுகளும் மூன்று சங்கங்கள்
இயங்கிவந்த செய்தியை உறுதிப்படுத்துகின்றன. தொல்காப்பியர் இரண்டாம்
சங்க காலத்தில் வாழ்ந்தவர். தொல்காப்பியத்தில் பல நூற்பாக்களில் ‘என்ப’,
‘மொழிப’, ‘என்மனார் புலவர்’, ‘பாங்குற உணர்ந்தோர் பன்னுங் காலை’
என்று கூறித் தமக்கு முற்பட்டிருந்த இலக்கண ஆசிரியர்களின்
முடிபுகளின்மேல் தொல்காப்பியனார் தம் முடிபுகளைச் சார்புறுத்துகின்றார்.
எனவே, தொல்காப்பியத்துக்கு முன்பு இலக்கண நூல்கள் வழங்கி
வந்திருக்கவேண்டுமென்றும் அவ்விலக்கணங்கள் தோன்றுவதற்குக் காரணமாக
உயர்வகை இலக்கியம் தமிழ்மொழியில் பெருகியிருக்க வேண்டுமென்றும்
கொள்ளுவதுதான் பொருத்தமாகும். இவ் விலக்கியப் படைப்புகள் யாவும்
முதற் சங்க காலத்திலோ, அன்றி அதற்கு முன்போ, பின்போ
தோன்றியிருக்கவேண்டும். எனவே, கடைச் சடங்கத்துக்கு முன்பு இரு
சங்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இயங்கி வந்தன என்பதைத் திட்டமாக
மறுக்கவே முடியாது. ஆனால், இச் சங்கங்கள் ஒவ்வொன்றும் பல்லாயிரம்
ஆண்டுகள் நீடித்து நடைபெற்றுவந்தன என்பதையும் ஒவ்வொன்றுக்கும்
இடையில் இத்தனையாண்டுகள் ஓடின என்பதையும் தக்க சான்றுகள் இன்றி
ஒப்புக்கொள்ளுதல் ஆராய்ச்சி முறைக்கே முரண்பாடாகும். .