பக்கம் எண் :

80தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     மூன்றாம் சங்கம் எப்போது கூடிற்று. எத்தனை யாண்டுகள் செயற்பட்டு
வந்தது, என்னும் கேள்விகளுக்கு உடன்பாடான விடை இன்னும்
ஆய்வாளரிடமிருந்து வரவில்லை. மூன்றாம் சங்கத்தின் காலம் கி.மு. 500
முதல் கி.பி. 500 வரை நடந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் பலவாறு
கருதி வந்துள்ளனர். சிலர் இற்றைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே
கடைச் சங்கம் நடைபெற்றது என்றும் கூறுவர். பரிபாடலிலும் சிலப்பதி
காரத்திலும் காணப்படும் சில நிகழ்ச்சிகளைக் கொண்டு வானவியல்
கணிப்பின்படி கணக்கிட்டுக் கடைச் சங்கம் நடைபெற்ற காலம் கி.பி. 7
அல்லது 8ஆம் நூற்றாண்டாகத்தான் இருக்கவேண்டுமென்று எல்.டி.
சுவாமிக்கண்ணு பிள்ளையவர்கள் கூறுவார். அந் நூல்களில்
கொடுக்கப்பட்டுள்ள காலக் குறிப்புகளைத் திருத்தமாகக் கணித்தறிவதற்குத்
தேவையான குறிப்புகள் அவற்றுள் கிடைக்க வில்லையாகலான் அவருடைய
முடிவை ஏற்றுக்கொள்ள வியலாது.

     சமுத்திரகுப்தர் காலத்திய தூண் ஒன்று அலகாபாத்தில் நிறுத்தப்
பட்டுள்ளது. அதன்மேல் காணப்படும் கல்வெட்டில் ‘மந்தராஜா’ என்னும்
சொல் சேர்ந்துள்ளது. சில ஆய்வாளர் இந்த மந்தராஜாவே சங்க கால
மன்னன் ‘மாந்தரஞ்சேரல்’ ஆவன் என்று கூறுகின்றனர். வெறும்
பெயர்மட்டுங் கொண்டே எதையும் துணியலாகாது. சமுத்திரகுப்தர் கி.பி.
4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவருடைய உடன்காலத்தவர்
மாந்தரஞ்சேரல் என்று கொள்ளுவதற்குச் சான்றுகள் இல. சேர நாட்டின்மேல்
சமுத்திரகுப்தர் படையெடுத்ததாகத் திட்டமாகத் தெரியவில்லை.
மணிமேகலையில் ‘குச்சரக்குடிகை’, ‘குச்சரக்குடிகைக் குமரியை மரீஇ’ என்னும்
சொற்கள் வருகின்றன. அவை கூர்ச்சரம் என்னும் நாட்டைக் குறிக்கின்றன
என்றும், கூர்ச்சரர் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும், சங்க
இலக்கியம் அவர்கள் காலத்திற்றான் எழுந்தது என்றும் மு. இராகவையங்கார்
உரைப்பார். இச்சான்றும் சொல் ஒற்றுமையின் அடிப்படையிற்றான்
நிறுவப்பட்டுள்ளதாகையால் இஃதும் ஏற்புடையதாக இல்லை. இந்திய
அரசாங்கத்தின் புதைபொருளாய்வு இயக்குநரான டாக்டர் என்.பி.
சக்கரவர்த்தியவர்களும், இராகவையங்கார் முடிவை ஒப்புக்கொள்ளுகின்றார்.
தமிழகத்தில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகள் யாவும் கி.மு. மூன்று,
இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இப் பிராமி எழுத்துகள்
வளர்ச்சியுற்றிராத நிலையில் காணப்படுகின்றன. ஆகையால், நன்கு வளர்ந்து
இலக்கிய இலக்கண வளம் செறிந்து விளங்கும் சங்க நூல்கள்