பக்கம் எண் :

தமிழ் வளர்த்த சங்கம் 81

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பு தோன்றியிருக்க முடியாது என்பது
டாக்டர் என்.பி. சக்கரவர்த்தியவர்களின் கருத்தாகும். கல்வெட்டில்
பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளும் சொற்களும் இலக்கண அமைதி
யில்லாதவை என்பதும், கல்வியறிவில்லாதவர்கள் செதுக்கியவை என்பதும்
அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். இவற்றை நோக்கி இவை பொறிக்கப்
பட்ட காலத்திய தமிழின் தரத்தை ஆய்ந்தறிவது தவறாகும். இந்தப் பிராமிக்
கல்வெட்டுகள் யாவும் சமணத் துறவிகளுக்கும், பௌத்த பிக்குகளுக்கும்
குகைப்பள்ளிகள் அளந்தளிக்கப்பட்ட செய்திகளையே குறிப்பிடுகின்றன.
இலக்கியத் தமிழுக்கும் இக் கல்வெட்டு மொழிக்கும் தொடர்பேதுமில்லை. ஒரு
காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டு மொழியைக் கொண்டு அக் காலத்தில்
வழங்கி வந்த மொழியின் வளத்தை அளந்தறிதல் ஆய்வு முறைக்கு ஏலாது.
ஒரு மொழியின் பழைய வடிவத்தைக் கொண்டும் மக்கள் பேச்சு வழக்கைக்
கொண்டும் அம்மொழியின் வளர்ச்சியை அளந்தறிய முடியாது.

     எஃது எப்படியாயினும் இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை போன்ற கேரள
ஆசிரியர்கள் சங்க இலக்கியத்தைக் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு ஒதுக்குவது
சாலப் பொருத்தமற்றது என்று அறிதல் அரிதன்று. திருஞானசம்பந்தரும்,
திருநாவுக்கரசரும் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் (கி.பி. 630-660) காலத்தில்
விளங்கியவர்கள். அவர்கள் பாடிய தேவாரப் பாடல்களில் யாக்கப்பட்டுள்ள
சொற்கள் எளியவை; இக்காலத்துச் சொற்களுக்குற்ற இலக்கண விதியும்,
சொல்லமைப்பும், பொருளமைப்பும் ஏற்றுள்ளவை. சங்கத் தமிழ்ச்
சொற்களுக்கும் அவற்றுக்குமிடையே ஆழ்ந்த வேறுபாடு உண்டு. சங்கத்
தமிழ்ச் சொற்களில் பல வழக்கொழிந்தன; பல பொருள் மாறுபட்டுள்ளன; பல
முற்றிலுமே உருமாற்றம் எய்தியுள்ளன. பல சொற்கள் பழைய இலக்கண
விதிகட்குட்பட்டுள்ளன. எனவே, சங்கத் தமிழ் தொடர்ந்து ஆறாம்
நூற்றாண்டுவரையில் வழங்கி வந்திருக்குமாயின், அது தன் வழக்கு மாறி,
அடுத்த நூற்றாண்டிலேயே திடீரென்று தேவாரத் தமிழாக வளர்ந்து
மாற்றமெய்தியிருக்க முடியாது. இலக்கண அமைதியிலோ, சொல்லமைப்பிலோ,
பொருள் கூட்டிலோ தேவாரத் தமிழுக்கு ஒப்பானதொரு மொழி வடிவத்தை
எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பாடல்கள் ஒன்றிலேனும் காணவியலாது.
மேலும், தேவாரப் பாடல்களில் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிய குறிப்புகள்
கிடைக்கின்றன. திருஞான சம்பந்தர் தம் திருவாலவாய்த் திருப்பதிகத்தில்