கலத்து ஏந்தி, நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்ப...’11 என்றும், நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்...’13 என்றும், ‘கலந்தரு திருவின் புலம் பெயர் மாக்கள் கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்...’12 என்றும், ‘யவனத் தச்சரும் தண்தமிழ் வினைஞர் தம்மொடுங் கூடி...’14 என்றும், இன்னும் பலவாறாகவும் தமிழர் யவனர் தொடர்பு பாராட்டப்பட்டுள்ளது. ஆதியில் யவனர் என்னும் சொல் கிரேக்கரையே சுட்டி நின்றது; பிறகு ரோமரையும், அடுத்து அயல்நாட்டினர் அனைவரையுமே அது குறிப்பிடலாயிற்று. தமிழர்-யவனர் வாணிகத் தொடர்பை இலக்கிய அகச்சான்றுகளும், கி.பி. 1, 2ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களான கிரேக்க, ரோம நூலாசிரியர் சிலரின் நூல்களும் மெய்ப்பிக்கின்றன. ஆர்மஸ் துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்குச் சுமார் நூற்றிருபது மரக்கலங்கள் பாய்விரித்தோடியதையும், அகஸ்டஸ் பேரரசின் அரசவைக்குப் பாண்டி நாட்டுத் தூதுவர் இருவர் சென்றிருந்ததையும் ஸ்டிராபோ தெரிவிக்கின்றார். ‘எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ்’ என்னும் நூலின் ஆசிரியரும், பிளினியும் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். அடுத்த நூற்றாண்டில் விளங்கியவர் தாலமி என்பார். தமிழகத்துத் துறைமுகப் பட்டினங்களைப்பற்றியும், மேலைநாடுகளுடன் தமிழகம் மேற்கொண்டிருந்த கடல் வாணிகத்தைப் பற்றியும் இவ்வயல்நாட்டு ஆசிரியர்கள் தத்தம் நூல்களில் விரிவாய் எடுத்துரைக்கின்றார்கள். இவர்கள் அளிக்கும் வரலாற்றுக் குறிப்புகளும், சங்க இலக்கியத்தில் காணப்படும் யவனரைப்பற்றிய செய்திகளும் இயைந்து காண்கின்றன வாதலால் பல சங்கப் பாடல்கள் கடல் வாணிகம் செழித்தோங்கியிருந்த காலத்தில் பாடப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிகின்றது. தமிழகத்தில் ஆங்காங்கு அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்துவரும் ரோமாபுரி நாணயங்களைக் கொண்டு ரோமரின் வாணிகத் தொடர்பானது உன்னத நிலையை எட்டியிருந்த காலத்தைக் கணித்தறியலாம். தமிழகத்தில் மிகவும் அதிகமாகக் கிடைப்பவை, அகஸ்டஸ், டைபீரியஸ் ஆகிய ரோமாபுரிப் பேரரசின் நாணயங்களேயாம். அரிக்கமேட்டுப் புதைபொருள்களானவை தமிழகத்துக்கும் ரோமாபுரிக்கும் இடையிட்ட கடல் வாணிகத்தின் விரிவையும் வளத்தையும் நமக்குப் பெரிதும் விளக்கிக் காட்டுகின்றன. புதுச்சேரிக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு மண் மேட்டுக்கு 11. புறம்-56. 12. பட்டினப்-185. 13. சிலப்-5: 11-22 14. மணிமே. 9 : 108-9. |