அரிக்கமேடு என்று பெயர். அது அரியாங்குப்பத்தாற்றை யணைந்தவாறு அமைந்துள்ளது. இம்மேட்டை யகழ்ந்தெடுத்து வியக்கத்தக்க செய்திகளைப் புதைபொருள் ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இவ்விடத்தில் சோழ நாட்டின் மிகவும் சிறப்பானதொரு துறைமுகம் அமைக்கப்பட்டிருந்தது. புதுச்சேரியை யவனர்கள் அக்காலத்தில் பொதுகை என்று பெயரிட்டழைத்தனர். கிறித்து ஆண்டின் தொடக்க காலத்தில் பொதுகை யவனர் ஈண்டி வாழ்ந்த மாபெரும் சேரியாகக் காட்சியளித்தது. சுட்ட செங்கல்லால் கட்டப்பெற்ற பந்தர்கள் என்னும் கடல் வாணிகப் பண்டசாலைகள், சாயத் தொட்டிகள், கண்ணாடி, பளிங்கு, பவழம், பொன் ஆகியவற்றால் ஆக்கப் பெற்ற மணிவகைகள், பல உருவங்களில் கல்லிழைத்த பதக்கங்கள் ஆகியவை அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. தமிழகத்து நுண்கலிங்கங்கள் அயல்நாட்டுக்கு ஏற்றுமதியாகுமுன் இங்குத் தான் வண்ணமூட்டப் பெற்றன. ரோமாபுரி யிலிருந்து பலவகையான மண்பாண்டங்கள் இறக்குமதியாயின. அத்தகைய பாண்டங்கள் இங்கும் வனையப்பட்டன. அரிக்கமேட்டில் காணப்படும் மண்கல ஓடுகள் யாவும் இத்தாலியில் அரிஸ்ஸோ என்ற நகரத்துக் குயவர்கள் வனைந்து தம் வாணிக முத்திரைகளைப் பதித்து அனுப்புவித்த அரிட்டைன் என்ற பானை சட்டி வகைகளின் ஓடுகளாம். யவனர் இரட்டைப் பிடிகொண்ட ஒரு வகை மதுச்சாடிகளில் (Amphorae) உயர்வகைத் ‘தண்கமழ் தேறல்’களைக் கொண்டுவந்து தமிழகத்தில் இறக்கினர்; அவற்றுக்கீடாகத் தமிழகத்து மிளகு, இலவங்கம், கலிங்கம் முதலியவற்றை ஏற்றிக்கொண்டு சென்றனர். அத்தகைய இரட்டைப்பிடி மதுச்சாடிகளின் சிதைவுகளும், கண்ணாடியாலான மதுக்கிண்ணங்களும் அரிக்கமேட்டில் கிடைக்கின்றன. தமிழகத்தில் அறுக்கப்பட்ட சங்கு வளையல்களும், பலவகையான அணிகலன்களும் இங்குக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழர் நாகரிகத்தின் தொன்மையை விளக்கும் இப் பொருள்கள் யாவும் தமிழர் தேடிக்கொண்டிருக்கும் சான்றுகளில் மிகவும் சிறந்தவையும், பயனுள்ளவையு மாகும். ‘அரிட்டைன்’ சட்டி வகைகளும், இரட்டைப்பிடி மதுச்சாவடிகளும் ரோமாபுரியிலிருந்து கி.பி. 20-50 ஆண்டுகளில் தமிழகத்தில் இறக்குமதியாகி யிருக்கக்கூடும் என்று டாக்டர் மார்ட்டிமர் வீலர் என்னும் புதைபொருள் ஆய்வாளர் கருதுகின்றார்.15 இந்த யவனச் சேரி கி.மு. முதல் நூற்றாண்டில் தோன்றியிருக்கவேண்டும்; கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கைவிடப் பட்டிருக்கவேண்டும். எப்படியாயினும் இச் சேரி 15. Dt. Mortimer Wheeler - Ancient India - II pp 24-5. |