கி.பி. இரண்டாம் நூற்றாண்டு இறுதிக்குள் பாழடைந்து போயிற்று. கிறித்தவ அப்தத்தின் முதல் இரு நூற்றாண்டுகளில் அரிக்கமேட்டுக் கடல் வாணிகம் மிகவும் உயர்ந்த நிலையில் செழிப்புற்று விளங்கியது. சங்கச் செய்யுள்கள் தரும் செய்திகளுக்கும், அகழ்வாராய்ச்சியில் வெளியாகியுள்ள புறச்சான்றுகளுக்கும், அயல்நாட்டு நூலாசிரியரின் கூற்றுகளுக்கும் உடன்பாடு காணப்படுவதால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சங்ககாலமானது மிகச் சிறந்த முறையில் நிகழ்ந்து வந்தது என்பதில் ஐயமேதுமில்லை. எனவே, இப்போதுள்ள ஆய்வு நிலையில், கடைச்சங்கம் கி.பி. முதல் மூன்று நூற்றாண்டுகள் நிகழ்ந்து வந்தது என்று கொள்ளுவது சாலப் பொருத்தமாகும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும் கி.பி. முதல் நூற்றாண்டுக்கும் இடையில் இடைச்சங்கம் இயங்கி வந்ததென்றும், அதற்கும் முன்பு கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கும், இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடையில் தலைச்சங்கம் நடைபெற்று வந்தது என்றும் கொள்ளலாம். இம்மூன்று சங்கங்களும் நீண்ட காலம் செயற்பட்டு வந்தன என்பதில் ஐயமில்லை. தலைச்சங்கம் தோன்றுவதற்கு முன்பும் தமிழ் வளர்ந்து கொண்டிருந்தது. பாணர்கள் ஊரூராகச் சுற்றிவந்து இசைப்பாடல்கள் பாடி வயிறு பிழைத்து வந்தனர். |