பக்கம் எண் :

86

                        7. சங்க இலக்கியம்

     சங்க இலக்கியத் தொகுப்பில் எட்டுத்தொகையும் பத்துப் பாட்டும்
சேர்ந்தவை என்று முன்னரே கண்டோம். எட்டுத் தொகையில் தனித்தனி
எட்டு நூல்கள் அடங்கியுள்ளன. அவ்வெட்டு நூல்களும் தொகை
நூல்களேயாம். அவையாவன: அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை,
புறநானூறு, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் ஆகியன.
பத்துப்பாட்டுத் தொகுப்பில் முறையே திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்
படை, சிறுபாணாராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு,
மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை,
மலைபடுகடாம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

     எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தொகுக்கப்பெற்ற கால வரிசையை
இன்னும் அறுதியிட முடியவில்லை. அகநானூற்றைத் தொகுத்தவர்
உப்பூரிகிழார் மகனார் உருத்திரசன்மர்; தொகுப்பித்தவன் பாண்டியன்
உக்கிரப்பெருவழுதி. குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ என்பவர்;
தொகுப்பித்தவர் இன்னாரெனத் தெரியவில்லை. நற்றிணையைத் தொகுத்தவர்
இன்னாரெனத் தெரியவில்லை; தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன்
மாறன் வழுதியாவான். புறநானூற்றைத் தொகுத்தோர் பெயரும்,
தொகுப்பித்தார் பெயரும் மறைந்துவிட்டன. ஐங்குறுநூறு புலத்துறை முற்றிய
கூடலூர் கிழார் என்ற புலவரால் தொகுக்கப்பட்டது; தொகுப்பித்தவன்
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற பெயர் படைத்த சேர
மன்னனாவான்.

     பதிற்றுப்பத்தைத் தொகுத்தவரும் தொகுப்பித்தவரும் இன்னாரெனத்
தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் ஒரு பதிகம்
சேர்க்கப்பட்டுள்ளது; அப் பத்தைப் பாடியவர் பெயர், பாடப்பெற்ற மன்னன்
பெயர், பாடியவர்க்கு அளிக்கப்பெற்ற பரிசுத்தொகை, பாடப்பெற்றவர் ஆட்சி
புரிந்த கால அளவு ஆகிய செய்திகளை அப்பதிகம் கூறுகின்றது. இப்
பதிகங்கள் யாவும் பிற்காலத்தில் இடைச்செருகல்கள் எனக் கருதப்படுகின்றன.
பதிற்றுப்பத்துப் பாடல்கள் எழுதப்பட்ட