பக்கம் எண் :

124தமிழ் இன்பம்

ஆனால்,  இப்போது  பரமசிவன்  படும்   பாடு  உனக்குத்  தெரியுமா?
பட்டாடை  என்ற  பேச்சே  அவர்  குடும்பத்தில் இல்லை. பார்வதியும்,
கங்கையும்  பருத்தி   நூலாடைகள்தாம்   கட்டிக்கொள்கிறார்கள்.  பரம
சிவனோ,   அதுவுமின்றிப்  புலித்தோலை   எடுத்து   உடுத்திருக்கிறார்;
குளிர்  தாங்கமாட்டாமல்  கரித்தோலைப்  போர்த்துக்கொண்டிருக்கிறார்.
உலகத்துக்   கெல்லாம் அவர்  படியளக்கிறார்  என்று பெயர். இப்போது
அவர்   குடும்பத்திற்கே   அரிசி   பங்கிட்டுக்   கொடுக்கப்படுகின்றது.
அவரிடம்  வேலை  பார்க்கும்   நான்  வயிறாரச்  சோறுண்டு அறுபது
நாளாயிற்று.    மூத்த   பிள்ளைக்கு   சாதம்   போதாது;  தம்பியாகிய
முருகனை  ஏய்த்து   அவன்   பங்கையும்   சேர்த்துச்  சாப்பிடுகிறான்.
முருகன்  ஒருவிளையாட்டுப்   பிள்ளை.   சாப்பாட்டு  வேளையில் ஒரு
மயில்  ஆடினால்  அதையே  பார்த்துக்  கொண்டிருப்பான்; ஒரு கோழி
கூவினால்    அதைக்    கொண்டுவர     ஓடுவான்   இதையெல்லாம்
பார்த்துக்கொண்டு      பேசாமல்      இருப்பாள்     பார்வதியம்மை.
பிள்ளைகளைத் தட்டி வளர்க்கத் தெரியாத  தாய்  அவள்.  அவளுக்கும்
கங்கைக்கும்  எப்பொழுதும்  சண்டை.  இருவரும் பிரிந்து தனித்தனியே
குடியிருக்க வேண்டுமென்று  பரமசிவனிடம்  விண்ணப்பம்  செய்தார்கள்.
இப்பொழுது   வீட்டுக்கும்   பஞ்சமல்லவா?  தனித்தனி வீடு தருவதற்கு
வழியில்லை  என்று  உணர்ந்த   தியாக   மூர்த்தியாகிய தலைவர், தம்
உடம்பில்   ஒரு  பாகத்தைப்  பார்வதிக்குக் கொடுத்தார்; காடு போன்ற
தம்  சடையில்   கங்கையை  வைத்துக்  கொண்டார். இப்படி இருக்கிறது
பரமசிவன்   நிலைமை.    உள்ளதை   சொல்லிவிட்டேன்;  இனி  உன்
சித்தம்” என்று கூறினான்.