பக்கம் எண் :

162தமிழ் இன்பம்

மதியம்மையின்   மீது   ஒரு   பிள்ளைத்   தமிழ்   பாடினார்.  அதன்
சுவையை ஒரு பாட்டால் அறியலாம்.

“வாரா திருந்தால் இனிநானுன்
   வடிவேல் விழிக்கு மையெழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகமிடேன்
   மணியால் இழைத்த பணிபுனையேன்

பேரா தரத்தி னொடுபழக்கம்
   பேசேன் சிறிதும் முகம்பாரேன்
பிறங்கு சுவைப்பால் இனிதூட்டேன்
   பிரிய முடன்ஒக் கலையில்வைத்துத்

தேரார் வீதி வளங்காட்டேன்
   செய்ய கனிவாய் முத்தமிடேன்
திகழு மணித்தொட் டிலில்ஏற்றித்
   திருக்கண் வளரச் சீராட்டேன்
  

தாரார் இமவான் தடமார்பில்
   தவழும் குழந்தாய் வருகவே!
சாலிப் பதிவாழ் காந்திமதித்

   தாயே வருக! வருகவே!”

என்ற     சொக்கர்  கவிதையைக்  காதாரக்  கேட்டார் வள்ளல். அதன்
நயம்  அவருள்ளத்தைக்  கொள்ளை  கொண்டது.  செவிச் சுவையுடைய
கவிஞரது  செவிக்கு  ஒரு  செவ்விய  பரிசளிக்க  அவர்  விரும்பினார்.
காந்திமதியம்மை   முன்னிலையில்   பிள்ளைத்தமிழ்  அரங்கேறியவுடன்
வள்ளல்  தாம்   அணிந்திருந்த  வயிரக்  கடுக்கனைக் கழற்றிக் கவிஞர்
காதிலே   மாட்டி   மகிழ்ந்தார்.   “செவிச்   செல்வமே   செல்வத்துட்
செல்வம்”  என்று  அக்  கடுக்கனைப்   புகழ்ந்து   வயிரப்  பரிசளித்த
வள்ளலை வாயார வாழ்த்தினார் சொக்கர்.