பக்கம் எண் :

192தமிழ் இன்பம்

அச்     சுனையின்  அருகே ஒரு பழங் குகை அமைந்திருக்கின்றது.
அந்  நாளில்  அறவோர்  இருந்து  அருந்தவம்  புரிந்த பள்ளி அதுவே
போலும்! பெரிய ஆலமரம்  ஒன்று  அக் குகையின்மேற்  கவிந்து அழகு
செய்கின்றது.   குகையின்   உள்ளே  படுக்கைபோல்   அமைந்த   பல
பாறைகள்  உள்ளன.  ஒல்லென  ஒலிக்கும்   சோலையும்,   சில்லெனக்
குளிர்ந்த  சுனையும்,  சீலம் வாய்ந்த  குகையும்,  அங்கே  செல்வாரைச்
செந்நெறியிலே   சேர்க்கும்.  ஒருமையுடன்   இருந்து,   இயற்கையோடு
இசைந்து இன்புற்று வாழ விருப்புவோர்க்கு ஏற்ற இடம் அது. 

தென்னாட்டில்    சமண  மதம் ஆதிக்கம் பெற்றிருந்த போது சமண
முனிவர்  பல்லாயிரவர்  அந்  நாட்டில்   வாழ்ந்தார்கள்.   மதுரையைச்
சூழ்ந்திருந்த  எட்டு  மலைகளில்  மட்டும்  எண்ணாயிரம்  முனிவர்கள்
இருந்தார்கள் என்பர். அந்த எட்டு மலைகளுள்  ஒன்று  சோலை மலை.
அந் நாளில் ‘இருங்குன்றம்’ என்பது அதன் பெயராக வழங்கிற்று.

“பரங்குன்று, ஒருவகம், பப்பாரம், பள்ளி
அருங்குன்றம், பேராந்தை ஆனை- இருங்குன்றம்
என்றுஎட்டு வெற்பும் எடுத்துஇயம்ப வல்லார்க்குச்
சென்றுஒட்டு மோபிறவித் தீங்கு”

என்று  பழம்  பாடல் அம்மலைகளின் பெருமையை எடுத்துரைக்கின்றது.
அங்கு  மாதவம்  புரிந்த  எண்ணாயிரம்  சமண  முனிவர்களும்  தமிழ்
நாட்டார்க்குக் கையுறையாகத் தந்த பாடல்களிற் சிறந்தவற்றைத் தொகுத்து
நாலடியார் என்று பெயர் கொடுத்தனர்.