இவ்வாறு அருகர் போற்றிய சோலைமலை, என்றும் முருகனுக்கு உரிய திருமலையாகும். பொதுவாக மலைகள் எல்லாம் முருகனுக்கு உரியனவேயாயினும், சிறப்பு வகையில் அப் பெருமான் சோலை மலையை ஒரு படை வீடாகக் கொண்டுள்ளார் என்று அறிந்தோர் கூறுவார். பழுமுதிர் சோலைமலையில் அமர்ந்து அருளும் குறிஞ்சிக் கிழவனாகிய குமரனை, “சூரர் குலம்வென்று வாகை யொடுசென்று சோலை மலைநின்ற - பெருமாளே” என்று திருப்புகழ் பாடிற்று. சோலைமலை பழங்காலத்தில் பாண்டியர்க்கு உரிய கோட்டையாகவும் விளங்கிற்று. பாண்டியர் அரசு வீற்றிருந்த தலைநகராகிய மதுரையின் வட கிழக்கே காதவழி தூரத்தில் உள்ளதாய், பத்து மைல் நீளமும், நாற்பது மைல் சுற்றளவும் உடையதாய்த் திகழ அம் மலையைப் பாண்டியர் தம் காவற் கோட்டையாக்கிக் கொண்டது சாலப் பொருத்த முடையதன்றோ? மலையத்துவசன் என்ற பாண்டியன் அக் கோட்டையைக் கட்டினான் என்பர். அந் நாளிலே கட்டிய உட்கோட்டை, வெளிக் கோட்டை ஆகிய இரண்டும் இன்றும் காணப்படுகின்றன. திண்ணிய மதில் அமைந்த சோலைமலையைக் கண்டு, கண்ணும் மனமும் குளிர்ந்தார் பெரியாழ்வார்; “மதில் சூழ் சோலைமலைக்கு அரசே” என்று பாடினார். இத் தகைய படை வீட்டையும் கோட்டையையும் காத்து நின்றான் ஒரு வீரன். முறுக்கிய மீசையும், |