தருக்கிய விழியும் உடைய அவ் வீரன் இப்பொழுது காவல் தெய்வமாய். பதினெட்டாம்படிக் கறுப்பன் என்ற பெயரோடு சோலைமலையிலே காட்சி யளிக்கின்றான். அவனை நினைத்தாலே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்; படிறுடையார் உள்ளம் பறையடிக்கும். நீதி மன்றத்தில் தீராத வழக்குகளும் கறுப்பையன் படிக்கட்டில் தீர்ந்துவிடும். முருகனுக் குகந்த படைவீட்டிலே - கறுப்பையன் காக்கும் கோட்டை மலையிலே - ஒரு கள்ளனும் நெடுங்காலமாக உள்ளான்! அன்று இன்று எனாதபடி, என்றும் அவன் உள்ளான் என்று ஆன்றோர் கூறுவர். கள்ளனும் அவனே; காப்பானும் அவனே! ஆதியும் அந்தமும் அவனே! ஆதியும் அவனே; சோதியும் அவனே! சோலைமலை அரசனும் அவனே! அம் மாயக் கள்வனைக் கண்டு கொண்டார் ஞானக் கவிஞராகிய நம்மாழ்வார். “வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்துஎன் நெஞ்சம் உயிரும் அவையுண்டு தானே யாகி நிறைந்தானே” என்று பாடினார்; பரவினார்; பரவசமாயினார்; உள்ளம் கவர்ந்த கள்வனை நினைந்து உருகினார்; அவன் அழகைக் கண்ணாற் பருகினார்; இன்ப வாரியில் மூழ்கினார். இங்ஙனம் ஆழ்வாரது நெஞ்சிலே புகுந்து திருவாய்மொழி பாடுவித்த வஞ்சக் கள்வனே சோலை மலையில் நின்று அருளும் திருமால். அவர் பெருமையால் சோலைமலை, ‘திருமால் இருஞ்சோலை’ என்னும் பெயர் பெற்றது. |