பக்கம் எண் :

218தமிழ் இன்பம்

“அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கம் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும்
அவனுடைய நிலையிவ்வா றறிநீயென் றருள்செய்வார்”

இது சேக்கிழார் பெருமான் திருவாக்கு.

காளத்திநாதன்பால்  அன்பு   பூண்ட  கண்ணப்பனைப்   போலவே
குகனும்   இராமனைப்   பிரிந்திருக்கலாற்றாத  மனப்பான்மை பெற்றான்.
அந்தி   மாலை  வந்தடைந்த   பொழுது  இராமன்  குகனை  நோக்கி,
“அப்பா!   இன்றிரவு  உன்  ஊருக்குச்  சென்று,  நாளைக்  காலையில்
கங்கையாற்றைக்    கடப்பதற்குப்   படகுகள்  கொண்டுவருக”   என்று
சொல்லிய   பொழுது,  குகனுடைய  மனம்   அனலிடைப்பட்ட மெழுகு
போல்  உருகுவதாயிற்று.  ‘என்  ஐயன், என் ஆண்டவன்,  என்னைப்
போ   என்றானே!   அவனை  விட்டு   நான்  எவ்வாறு   போவேன்?
அவனுடனிருத்தலே  எனக்குப்   பேரின்பம். அவனைப்  பிரிந்திருத்தல்
‘பெருந்துன்பம்’  என்று  எண்ணி, இராமனை  நோக்கி,  “ஐயனே! நான்
போகலாற்றேன்; ஈண்டிருந்து  என்னால்  இயன்ற  தொண்டு செய்வேன்”
என்றான்.

“கார்குலாம் நிறத்தான் கூறக்
   காதலன் உணர்த்து வான்இப்
பார்குலாம் செல்வ நின்னை
   இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வ னேன்யான்
   இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன் ஆன தைய
    செய்குவன் அடிமை என்றான்”