யாது பசியும், பிணியும் குடிகளை வருத்தும் என்பதும் பழந்தமிழர் கொள்கை. இதனாலேயே ‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ என்ற வாசகம் எழுந்தது. வேளாண்மை என்னும் பயிர்த்தொழில், சிறந்த தொழிலாகக் கருதப்பட்டது. இல்லறம், துறவறம் என்னும் இருவகை அறமும் நாட்டில் நிலைபெறுவதற்கு வேளாண்மை முட்டின்றி நடைபெறல் வேண்டும் என்பது முன்னைத் தமிழ்நாட்டார் அறிந்த உண்மை. அந்நாளில் வேளாளர், சிறந்த குடிகளாகக் கருதப் பட்டார்கள். அறத்தையும் அறிவையும் வளர்ப்பதற்கு இன்றியமையாத உணவுப் பொருள் வளத்தை நாட்டிலே பெருக்கியவர் அவர்களே. இத் தகைய பெருமக்கள் இருத்தலாலேயே உலகம் நிலை பெற்றிருக்கின்றதென்று இளம்பெருவழுதி என்னும் பாண்டியன் பாடினான். இன்னும், வாழ்க்கைக்கு உரிய சிறந்த நெறிகளை யெல்லாம் எடுத்தோதுகின்ற புறநானூறு, எல்லோரும் கடைப்பிடிப்பதற்குரிய ஓர் அறத்தினைத் திட்டவட்டமாகக் கூறுகின்றது. “பல்சான் றீரே ! பல்சான் றீரே ! நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் !” என்ற அறவுரையைக் கடைப்பிடித்தல் தமிழ் மக்கள் கடனாகும். இலக்கிய நலம் புறநானூற்றுப் பாடல்களில் அமைந்துள்ள சொல்லையும் பொருளையும் பிற்காலப் பெருங்கவிஞர் பொன்னே போல் போற்றினர். நாட்டில் வாழும் உயிர்களுக்கு அரசனே உயிர் என்ற உண்மை, |