பக்கம் எண் :

224தமிழ் இன்பம்

இனிது     விளங்கும்.   கானகத்தில்   தனியாளாய்  இருந்த  தையலை
இலங்கை   வேந்தன்    வஞ்சனையாற்   கவர்ந்த  மனோ  வேகமாகச்
செல்லும்பொழுது,    ஆதரவற்று    அரற்றிய  மங்கையின்  அழுகுரல்
கேட்டுக்  கழுகின்   காவலன்   காற்றினுங்  கடுகி  வந்தான்;  அறநெறி
தவறிய   அரக்கனுடன்  நெடும்  பொழுது  கடும்  போர் புரிந்து ஆவி
துறந்தான்.   இவ்வாறு ஆதரவற்ற சீதைக்காக அறப்போர் புரிந்து  ஆவி
நீத்த    கழுகின்  வேந்தன்,   “தெய்வ  மரணம்”  எய்தினான்  என்று
இராமன்   போற்றிப்  புகழ்ந்தான்.  “ தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு”
என்று   சொல்லின்   செல்வனாய  அனுமன் புகழ்ந்துரைத்தான். அரன்
அளித்த    வாளுடையானை    வெறும்   அலகுடையான்  வெல்லுதல்
இயலாதென்றறிந்தும்,  அறநெறி  திறம்பிய அரக்கனோடு பொருது ஆவி
துறத்தலே  தன்   கடமை   என்று  அறிந்து,  கழுகின் வேந்தன் உயிர்
கொடுத்துப் புகழ்  கொண்டான்.  இவ்வாறு இராமனது சேவையில் அமர்
புரிந்து  இறக்கவும்   ஒருப்படாத   தனது  குறையை  நினைந்து வானர
வீரன் வருந்தினான்.

இனி     கங்கைக்  கரையின்  காவலனாகிய குகன், பரதனது பரந்த
சேனையைக்  கண்டபோது,  அவன் இராமனை வெல்லக் கருதி வந்தான்
என்று  எண்ணித்   தன்னுயிரையும்  ஒரு பொருளாகக் கருதாது போர்க்
கோலம் புனைந்து,

“ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடு வில்லாளோ

தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு
                            சொல்லன்றோ

ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ”