னர். தென்காசி என்பது அதன் பெயர். பராக்கிரம பாண்டியன் என்ற அரசன் “தென்காசி கண்ட பெருமாள்” என்று சாசனங்களிலே பேசப்படுதலால் அவனே தென்காசியை உருவாக்கி, அங்கு விசுவநாதருக்கு ஒரு திருக்கோயிலும் கட்டினான் என்று கொள்ளலாம். “ஓங்கு நிலைஒன்ப துற்றதிருக் கோபுரமும் பாங்குபதி னொன்று பயிறூணும் - தேங்குபுகழ் மன்னர் பெருமான் வழுதிகண்ட தென்காசி தன்னிலன்றி உண்டோ தலத்து” என்று பராக்கிரம பாண்டியன் செய்த திருப்பணியின் செம்மையைப் பாராட்டுகின்றது ஒரு சாசனப்பாட்டு. நதிகள் ஒன்று கூடும் துறைகளைப் புனிதமான இடங்களாகக் கருதிப் போற்றுதல் பாரத நாட்டுப்பண்பு. கங்கையும் யமுனையும் சரஸ்வதியும் கூடும் இடம் திரிவேணி சங்கமம் என்று வடநாட்டில் அழைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் புண்ணிய திகள் கூடு மிடங்கள் பல உள்ளன. அத் தகைய இடங்களை முக்கூடல் என்று வழங்குவர் தமிழ் மக்கள். தென்பாண்டி நாட்டில் பொருநையாறும் சிற்றாறும் கயத்தாறும் ஒன்றுசேர்கின்ற இடம் முக்கூடல் என்னும் பெயர் கொண்டு முற்காலத்தில் சிறந்திருந்தது. இந் நாளில் அந்த இடம் சீவலப்பேரி என்று வழங்குகின்றது. காஞ்சி மாநகரத்திற்கு அருகே பாலாறும், சேயாறும், கம்பையாறும் சேர்கின்ற இடம் திருமுக்கூடல் என்னும் பெயர் பெற்றுள்ளது. திரிவேணி சங்கமம் என்றாலும் முக்கூடல் என்றாலும் பொருள் ஒன்றே. ஐந்து ஆறுகள் பாயும் வள நாட்டிற்குப் ‘பஞ்சாப்’ என்று பெயரிட்டனர் வடநாட்டார். |