பின்பற்றிப் பாடிய பாரதியார், இனி வருங்காலத்தில் இசைத் தமிழ் வளர்ந்தோங்குதற்குரிய வழிகளையும் காட்டியுள்ளார், தமிழ் நாட்டில் தமிழ் மொழி தழைத்து ஓங்க வேண்டுமாயின் ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை’ என்பது பாரதியார் கருத்து. தமிழ் நாட்டின் பெருமையைப் புத்தம் புதிய முறையில் பாடிய பாரதியார் பாட்டு இந்நாளில் தமிழ் நாடெங்கும் பரவி இன்பம் பயக்கின்றது. “கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” “வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” என்ற பாரதியார் பாட்டைக் கேட்கும் மக்களின் உள்ளத்தில் தமிழ் ஆர்வம் வளராது ஒழியுமோ? “தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதியார் பாட்டுத் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பும் தகைமை வாய்ந்ததன்றோ? இத்தகைய இசைப்பாட்டு ஆயிரம் ஆயிரமாக எழுந்து தமிழ்நாடு எங்கும் பரவுதல் வேண்டும். சிலப்பதிகாரக் கவிஞர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்துத் தமிழ் நாட்டின் இயற்கைச் செல்வங்களாகிய ஆறுகள், அருவிகள், மலைகள், கடல்கள், முதலியவற்றின் அருமை பெருமைகளை இசைப்பாட்டின் வாயிலாகப் பொது மக்களுக்கு வழங்குதல் வேண்டும். சென்னை மாநகரம் |