பக்கம் எண் :

மேடைப் பேச்சு51

இப்பொழுது  தமிழ்   மக்களின்  உள்ளத்தைப்    பெரிதும்   கவர்ந்து
நிற்கின்றது.   தமிழ்   நாட்டின்    தலைநகரமாகிய    சென்னையம்பதி
‘விரிநகர்’  என்று  புலவர்   பாடும்   புகழுடையதாகும். இந்    நகரில்
அமைந்த    கடற்கரைச்   சாலை    இவ்வுலகிலுள்ள    அருமையான
காட்சிகளுள்  ஒன்றென்று  நாடறிந்தவர்  கூறுவர். இத்தகைய   சீர்மை
வாய்ந்த   சாலையைக்   குறித்து   அருமையான     இசைப்பாட்டுகள்
தோன்றுதல்    வேண்டும்.  சென்னை   அருகேயுள்ள    மகாபலிபுரம்
என்னும்    மாமல்லபுரத்தில்    நெய்தலும்   குறிஞ்சியும்    கொஞ்சி
விளையாடும்  காட்சி  இந்நாட்டார்க்கு  மட்டுமன்றி  எந்நாட்டவரக்கும்
இன்பமளிக்கின்றது. இன்னும் தமிழ்முனிவர்  வாழும் பொதிய  மலையும்
மந்த  மாருதம்   மகிழ்ந்துலாவும்   திருக்குற்றால   மலையும்   மாந்தர்
கருத்தையும்    கண்ணையும்   கவரும்   அழகு     வாய்ந்தனவாகும்.
இவ்வியற்கைப்   பொருள்கள்  எல்லாம்   இசைப்பாட்டின்   வழியாகத்
தமிழ்  நாட்டிற்கு  இன்பம்  அளித்தல்  வேண்டும்.

பழமையான   பண்களின் வரலாற்றை ஆராய்வதும்  புத்தம்   புதிய
இசைப்பாடல்களை     இயற்றுவதும்     இத்தமிழிசைச்     சங்கத்தின்
அடிப்படையான     நோக்கமாகும்.     இத்தகைய    பெரும்பணியை
மேற்கொண்ட   இச்சங்கம்   பல்லாண்டு  வாழ்க   என      மனமார
வாழ்த்துகின்றேன்.      இசை      நலம்    இல்லாத    என்னையும்
இவ்வரும்பணியில் இசைவித்த  செட்டி  நாட்டரசர், ராஜாசர், முத்தையா
செட்டியார்    அவர்களுக்கும்   தமிழிசைச்    சங்கத்தார்க்கும்    என்
பணிவார்ந்த  வணக்கம்  உரியதாகும்.