பக்கம் எண் :

இயற்கை இன்பம்53

இந்திரன்.  அவன்  மேகங்களை  இயக்கும் இறைவன்.  தமிழ்  நாட்டார்
பழங்காலத்தில்  இந்திரனை   விளை நிலங்களின் இறைவனாக  வைத்து
வணங்கினார்கள்.  சோழவள   நாட்டில்   இந்திர விழா  இருபத்தெட்டு
நாள்  கோலாகலமாக  நடைபெற்றது.

“பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க”

வேண்டும் என்று  அவ் வானவரைத்  தமிழ்நாட்டார்  வழிப்பட்டார்கள்.
பண்டைத்   தமிழரசர்   காலத்தில்   சிறப்பாக   நடந்த  அத்திருநாள்,
இப்பொழுது     குன்றிக்    குறுகி    ஒருநாளில்      பண்டிகையாக
நடைபெறுகின்றது.

போகி   பண்டிகையை  அடுத்து  வருவது பொங்கற் புதுநாள் ; அந்
நாளில்  ‘பழையன  கழிதலும் புதியன  புகுதலும்’ நிகழும் ; வீட்டிலுள்ள
பழம்பானைகள்     விடை   பெறும்  ;  புதுப்பானைகளில்   பொங்கல்
நடைபெறும்.    பால்பொங்கும்  பொழுது, “  பொங்கலோ  பொங்கல்”
என்னும்    மங்கல   ஒலி  எங்கும்  கிளம்பும். அப்பொழுது, பெண்கள்
குரவையாடுவர்  ;   பிறகு   “பூவும்  புகையும்  பொங்கலும்”  கொண்டு
இல்லுறை   தெய்வத்தை   வணங்குவர்.  அனைவரும்  வயிறார உண்டு
மகிழ்வர்.

பொங்கலுக்கு   அடுத்த நாள் நிகழ்வது மாட்டுப் பொங்கல். நாட்டுப்
புறங்களில்   அது  மிக்க   ஊக்கமாக  நடக்கும்.  முற்காலத்தில் மாடே
செல்வமாக   மதிக்கப்   பட்டது.  மாடு  என்ற  சொல்லுக்கே செல்வம்
என்னும்   பொருள்  உண்டு.  மன்பதைக்காக   உழைக்கும்  வாயில்லா
உயிர்களில்,    மாட்டுக்கு  ஒப்பாகச்  சொல்லத்   தக்கது  மற்றொன்று
இல்லை.  விளை நிலத்தில்  ஏர் இழுப்பது மாடு; பரம்பு அடிப்பது மாடு;
அறுவடைக்   காலத்தில்   சூடடிப்பது   மாடு  ;   களத்து  நெல்லைக்
களஞ்சியத்தில்   சேர்ப்பது   மாடு.  ஆகவே,  மாடு இல்லை யென்றால்
பண்ணையும்  இல்லை ; பயிர்த்  தொழிலும்  இல்லை.