குலாவும் ; கருங் குயில்கள் மறைந்து நின்று கூவும் ; “மன்னன் மாரன் மகிழ்துணை யாகிய இன்இளவேனில் வந்தனன்” என்று குயில் கூவுவதாக இளங்கோவடிகள் பாடுகின்றார். எனவே, இளவேனிற் காலம் மன்மதன் மகிழ்ந்து ஆட்சி செய்யும் காலம். புதுமணம் புரிய விரும்புவோர் சித்திரையின் வரவை மெத்த ஆசையுடன் நோக்குவர். திருமணத்திற்குரிய சூழ்நிலை அப்போது இயல்பாக அமைந்திருக்கும் ; பகலவன் ஒளி தருவன். வீடுதோறும் நெல்லும் பிறவும் நிறைந்திருக்கும். தென்றல் என்னும் இளங்காற்று வீசிக் கொண்டிருக்கும். இனிய திருமணம் இன்பமாக நடைபெறும். இத்தகைய இன்பம் நிறைந்த இளவேனிலின் சுகத்தை ஈசனுடைய பேரின்பத்திற்கு நிகராகப் பாடுகின்றார் வடலூரடிகளார். இளங்கோடையிலே, இளைப்பாற்றிக் கொள்ளுதற் கேற்ற செழுஞ் சோலையாகவும், ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீராகவும், மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றாகவும் ஈசனது இனிய கருணையைக் கண்டு போற்றுகின்றார் அக்கவிஞர். எனவே, இயற்கை அன்னை இனிய கோலத்தில் இலங்கும் காலம் இளவேனிற் காலம். மாந்தர் ஐம்பொறிகளாலும் நுகர்தற்குரிய இன்பம் பொங்குங் காலம் இளவேனிற் காலம். பனியால் நலிந்த மக்கள் பகலவன் ஒளியைக் கண்டு, “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” என்று இன்புற்று ஏத்தும் காலம் இளவேனிற் காலம். ஆகவே, இயற்கையோடு இசைந்து வாழ்ந்த பழந்தமிழ் மாந்தர், இன்பநெறி காட்டும் இளவேனிற் பருவத்தின் முதல் நாளைத் தமிழ் ஆண்டின் தலைநாளாகக் கொண்டது மிகப் பொருத்த முடையதன்றோ? |