8, தமிழ்த் தென்றல்* தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு. தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர் ; வடக்கேயிருந்து வரும் குளிர் காற்றை வாடை என்றார்கள். தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் தென்றல் என்றார்கள். வாடை என்ற சொல்லிலே வன்மை யுண்டு ; தென்றல் என்ற சொல்லிலே மென்மை யுண்டு; தமிழகத்தார் வாடையை வெறுப்பர் ; தென்றலில் மகிழ்ந்து திளைப்பர். இயற்கை யன்னை இனிய கோலங்கொண்டு விளங்கும் இளவேனிற் காலத்தில், மெல்லிய தென்றலைத் தேராகவும், இனிய கரும்பை வில்லாகவும் குயிலைத் தூதாகவும் கொண்டு மன்மதன் ஆட்சி புரிகின்றான் என்று கவிஞர் பாடி மகிழ்வர். இத்தகைய தென்றல், பிறப்பு வகையிலும் சிறப்பு வாய்ந்தது. நறுமணங் கமழும் சந்தனச் சோலை சூழ்ந்த செந்தமிழ் மலையே அதன் பிறப்பிடம் என்பர். “திங்கள்முடி சூடுமலை, தென்றல்விளை யாடுமலை தங்குமுகில் சூழுமலை, தமிழ்முனிவன் வாழுமலை” * விருதுநகரிலே தோன்றியுள்ள ‘தமிழ்த் தென்றல்’ என்ற பத்திரிகையின் தலையங்கமாக எழுதப்பட்டது. |