பக்கம் எண் :

இயற்கை இன்பம்59

என்று     அம்மலையைப்  புகழ்ந்து   பாடினாள்    ஒரு   குறவஞ்சி.
மெல்லிய முகிலைத் துகிலாக  உடுத்து,   வெள்ளிய மதியை  முடியிலே
அணிந்து     விளங்கும்       பொதிகைத்      தாயின்    மடியிலே
தவழ்ந்துவிளையாடும்   இளங்குழந்தையாக  அவ்  வஞ்சிக்குத் தென்றல்
காட்சியளிக்கின்றது.

‘திக்கெல்லாம்    புகழுறும் திருநெல்வேலி’க்குத் திருஞான சம்பந்தர்
எழுந்தருளிய  பொழுது,  பொதிகைத்   தென்றல்  அவரை  வரவேற்று
இன்ப  சுகம்  தந்தது. தண்ணறுஞ்  சாலைகளிலும்,  தாழம்  பூக்களிலும்
நுழைந்து,    நறுமணம்    கவர்ந்து   வந்த  பொதிகைத்  தென்றலைத்
தேவாரப் பாட்டில் இசைத்துப் பாராட்டினார் அவ் இளங்கவிஞர்.

“துன்றுதண் பொழில் நுழைந்து எழுவிய கேதகைப்
   போதளைந்து
 
தென்றல்வந் துலவிய திருநெல்வே லிஉறை
   செல்வர் தாமே”

என்பது   அவர்   திருப்பாட்டு.   பொதிகையிலே  தவழ்ந்த   குழவித்
தென்றல் நெல்லையம்  பதியிலே நடந்து  உலாவக்  கண்டு  இன்புற்றார்
அக்கவிஞர்.

மதுரை    மாநகரின்  அருகே  கண்ணகியும்  கோவலனும்  நடந்து
சென்றபொழுது  தென்றல்  அவரை எதிர் கொண்டு அழைத்தது. அதன்
பிறப்பையும் வளர்ப்பையும் எடுத்து உரைக்கின்றார் இளங்கோவடிகள்:  

“மலயத்து ஓங்கி மதுரையில் வளர்ந்து
புலவர் நாவிற் பொருந்திய தென்றல்”