என்பது அவர் புகழுரை ; முத்தமிழ் முனிவன் வாழும் மலையிலே பிறந்து, சங்கத் தமிழ் வழங்கும் மதுரையிலே வளர்ந்து தென்றலைத் தமிழ்த் தென்றலாகவே கருதி இன்புறுகின்றார் கவிஞர் ; புலவர் பாடும் புகழுடைய தென்றலைப் போற்றி மகிழ்கின்றார். மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத பேரின்ப சுகத்தை ஒல்லும் வகையால் உணர்த்தலுற்றார் அருட்கவிஞர் ஒருவர் ; இளவேனிற் காலம் ! சித்திரை மாதம்! முழுமதி எங்கும் ஒளி வீசுகின்றது! தண்ணீர் நிறைந்த ஒரு தாமரைக் குளத்திலே அவ்வொளி தவழ்கின்றது. இவ்வியற்கைக் காட்சியைக் கண்டு இன்புற்றிருக்கின்றான் ஒருவன். அப்போது தென்றல் அசைந்து வருகின்றது. அம்மெல்லிய காற்றிலே நல்ல வீணையின் ஒலி மிதந்து வந்து செவிக்கு விருந்தளிக்கின்றது. இதனைக் கவிதையிலே காட்டுகின்றார். கவிஞர்: “மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே” என்பது திருநாவுக்கரசர் இசைத்த பாட்டு. ஈசன் அளிக்கும் இன்ப சுகம், வசந்த காலத்தில் இசைந்த இயற்கை இன்பம் போன்றது என்று அருளினார் அவ்வருட் கவிஞர். புகழ் பூத்த பொதிய மலையிற் பிறக்கும் தென்றலைப் போன்று, பொருள் பூத்த விருதுநகரிலே பிறக்கின்றது ‘தமிழ்த்தென்றல்.’ இலக்கிய மறுமலர்ச்சிச் |