தேவாரத்தில் அமையும் பேறுபெற்றது. குறும் பலாவின் கீழ் அமர்ந்த சிவக்கொழுந்தை அப்பெருமான் மனங்குளிர்ந்து பாடினார். திருக்குற்றால மலையிலே வாழும் களிறும் பிடியும் விரையுறு நறுமலர் கொய்து குறும்பலாவிற் கோயில் கொண்ட ஈசனைக் குழைத்து வணங்கும் கோலம், “பூந்தண் நறுவேங்கை கொத்திறுத்து மத்தகத்திற் பொலிய ஏந்திக் கூந்தற் பிடியும் களிறும் உடன்வணங்கும் குறும் பலாவே” என்ற தேவாரப் பாட்டில் எழுதிக் காட்டப்படுகின்றது. நறுமணங் கமழும் பொழில்களைக் காணும் பொழுதும், அப் பொழில்களின் இடையே கிளைக்குக் கிளை தாவி விளையாடும் குரங்குகளைப் பார்க்கும் பொழுதும் பிள்ளைப் பெருமானாகிய திருஞான சம்பந்தர் உள்ளம் துள்ளி மகிழும். ‘தேனருவித் திரையெழும்பி வானின் வழி யொழுகும்’ திருக்குற்றால மலையில், இந்நாள் இளைஞர்கள் கண்டு இன்புறுகின்ற வானரங்களை அந்நாளில் திருஞான சம்பந்தரும் கண்டார்போலும்! அப்பொழுது அவர் அடைந்த உள்ளக்கிளர்ச்சி ஒரு தெள்ளிய பாட்டாயிற்று “மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி குலையார் வாழைத் தீங்கினி மாந்தும் குற்றாலம்” என்ற தேவாரப் பாட்டில் மந்திகள் தம் வயிற்றைக் கட்டித் தழுவிய குட்டிகளோடு வாழைக் குலைகளின் மீது அமர்ந்து வளமான கனிகளை மாந்தும் காட்சி அழகுற மிளிர்கின்றது. |