பக்கம் எண் :

இயற்கை இன்பம்65

அருமை   பெருமைகளைக்    கற்றறிந்தார் வாயிலாகக் கேட்டு இன்புற்ற
நாயக்கர்   திரிகூடராசப்பரை  ஆதரிக்க    விரும்பினர்;  குற்றாலத்தில்
இன்றும்  ‘குறவஞ்சிமேடு’   என்று   வழங்குகின்ற  நன்செய்  நிலத்தை
அவருக்கு   நன்கொடையாக   அளித்தார்.   கருப்புக்கட்டி    ஊற்றின்
அருகே   அமைந்துள்ள    அவ்வளமார்ந்த    நிலம்,  வழி  வழியாக
அக்கவிராயர் குடும்பத்தினர்  ஆளுகையில்  இருந்து  வருகின்றது. கவிப்
புலமையால்   திரிகூடராசப்பர்    பெற்ற   கவிராசர்  என்ற  பட்டமும்
திருக்குற்றால நாதர் சந்நிதியில் வாகனக்  கவி  பாடும் சிறப்பும் இன்றும்
அவர் குடும்பத்தார்க்கு உண்டு.

திருக்குற்றாலத்தின்     அருகே அமைந்த  ஊர்கள் யாவும் குறிஞ்சி
வளம்   வாய்ந்தனவாகும்.   அவற்றுள்   ஒன்று பைம்பொழில் என்னும்
அழகிய பெயர் பெற்றுள்ளது.  பசுமையான  சோலை சூழ்ந்த சிற்றூரைப்
பைம்பொழில் என்றழைத்த  பண்டைத்  தமிழ்  மக்களது  மனப்பான்மை
எண்ணுந்தோறும்   இன்பம்  பயப்பதாகும்.  கவிநலஞ் சான்ற அவ்வூர்ப்
பெயரைச்  சரியாகச் சொல்ல  மாட்டாத  பாமர மக்கள் ‘பம்புளி’ என்று
சிதைத்துவிட்டார்கள்.   அச்சிற்றூரின்  எல்லையில்  திருமலையென்னும்
சிறந்த    குன்றம்     அமைந்திருக்கின்றது.     முருகப்    பெருமான்
எழுந்தருளிய    குன்றமாதலால்    அது,  திருமலை  என்னும்  பெயர்
பெற்றது.

இன்னும்,     குற்றாலத்தின்  ஒருசார்  காசிமேசபுரமும்,  இலஞ்சியும்
அமைந்துள்ளன.     காசிமேசபுரத்திற்கும்     காசிக்கும்    எவ்வகைத்
தொடர்பும்    இல்லை   ஆங்கில  வர்த்தக்  கம்பெனியார்  காலத்தில்
காசாமேஜர் என்ற பெயருடைய ஆங்கிலேயர் ஒருவர் தென்னாட்டில்