பக்கம் எண் :

238ஒப்பியன் மொழிநூல்

வாரி - L. mare, the sea; Fr. mer, mare, pool; Ger. and Dut. meer; A.S. mere; E. mere, a pool or lake.

வாரணம் - L. marinus, E. marina, n. marine, maritime, adj.

வாரணன் கடலோனான நெய்தல்நிலத் தெய்வம். வாரணன் என்னும் தமிழ்ப்பெயர் வடமொழி வடிவத்தை யொட்டி வருணன் என்று திரிக்கப்பட்டது. இந்திய ஆரியர், மேலையாசியாவினின்றும் நிலவழியாய் இந்தியாவிற்கு வந்தமையால், வாரித் துறையறிந்தவரல்லர். சமுத்திரம் என்று வேதத்திற் சொல்லி யிருப்பது, வானத்திலுள்ள மேகப்படலத்தை.1

நாவாய் - L. navis, O.Fr. navis, Gr. naus, Skt. nau, E. navy, n. nautical, adj.

நால்வாய் (யானை) - நாவாய், நால்வாய்போல் அசைவ தால் கப்பல் நால்வாயெனப்பட்டது (உவமையாகுபெயர்).

“நாவாய் - களிகள்போற் றூங்குங் கடற்சேர்ப்ப”

என்றார் முன்றுறையரையனார். களி - மதங்கொண்ட யானை. களிகொள்வது களிறு (ஆண்யானை). கள் + இ = களி. கள் = மயக்கம், மதம்.

“வெளி விளக்குங் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத்
தூங்குநாவாய் துவன்றிருக்கை”

(பட்டினப். 172-3)

என்ற பட்டினப்பாலை யடிகளையுங் காண்க.

நால்வாய் - நாவாய். பொருள் வேறுபடுத்தற்கு இடைக் குறைந்தது.

படகு - low. L. bargia, Gk. baris, O. Fr. barge, a boat.

Low. L. barca, Fr. barque, E. bark, barque, a ship of small size.

படகு - barge-bark. ட-ர, போலி.

ஒ.நோ : முகடி - முகரி, குடகு - Coorg.

Galleon (Sp. galeon - Low. L. galea), galley (O. Fr. galee - Low. L., galea) என்னும் பெயர்கள் கலம் என்னும் பெயரையும், Ship (L. scapha, Gk. skaphos, Ger. schiff, Ice.skip, Goth.skip, A.S. scip, E. skiff) என்னும் பெயர் கப்பல் என்னும் பெயரையும் பெரும்புடை ஒத்திருக்கின்றன.


1. Vedic India, p. 107.