பக்கம் எண் :

100ஒப்பியன் மொழிநூல்

“நிறைமொழி மாந்தர்” என்னும் தொல்காப்பிய நூற்பா வுரையில், 'தானே' என்று பிரித்தான், இவை தமிழ் மந்திர மென்றற்கும், பாட்டாகி அங்கதமெனப்படுவனவும் உள, அவை நீக்குதற்குமென உணர்க” என்று நச்சினார்க்கினியர் கூறியிருத்தல் காண்க.

தமிழிலக்கணத் தோற்றம்

எழுத்து

எழுத்துகளில் முதலாவது நெடிலும் பின்பு குறிலும் தோன்றின. முற்றமிழர் குழந்தையர் போன்றனர். குழந்தைகள் வாயில் நெடிலே முன்பிறக்கும். குறிலினும் நெடிலே ஒலித்தற் கெளிது. நெடிலுங் குறிலும் ஒலியில் வெவ்வேறல்ல; அளவிலேயே வெவ்வேறாகும். நெடில் குறுகிக் குறிலாயிற்றென்க.

சுட்டும் வினாவும் முதலாவது நெடிலாகவே யிருந்தன.

இதை,

“நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி”

(மொழி. 10)

“குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே”

(மொழி. 11)

“ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா”

(நூல். 32)

“நீட வருதல் செய்யுளுள் உரித்தே”

(உயிர். 6)

என்று தொல்காப்பியர் கூறுவதாலும், பிற திராவிடமொழிகளில் நெடில்கள் இன்றும் உலகவழக்கில் வழங்குவதாலும் அறியப்படும்.

ஐ, ஒள இரண்டே தமிழில் புணரொலிகள் (Diphthongs).

தமிழில் அரிவரி தோன்றினபோது, ஏகார ஓகாரங் கட்குக் குறிகளமைந்திருக்கவில்லை. பிற்காலத்தில்தான் அவை தோன்றின. அப்போது அவற்றின்மேலும் அவையேறின மெய்யெழுத்துகளின் மேலும் புள்ளியிட்டனர். பிற்காலத்தில் புள்ளிக்குப் பதிலாக, உயிரெழுத்துகளில் கீழிழுப்புக் கீழ்ச்சுழிகளும், உயிர்மெய்யெழுத்துக் கொம்புகளில் மேற்சுழிகளும் இடப்பட்டன.

ஆய்தம் இத்தாலிய ஹகரம்போன்ற மெல்லிய ககரம்.