“ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” | (உரி. 34) |
என்பது தொல்காப்பியம். ஆய்தல் = நுணுக்கமான ஒலி. மெய்யெழுத்துகளில், ழ ள ற ன என்ற நான்கும் முதன்முதல் அரிவரி தோன்றிய காலத்திற்குப் பிற்பட்டவை. அதனாலேயே அவை ஈற்றில் வைக்கப்பட்டன. ல - ள - ழ. ஒலித்தற் கெளிமைகருதி ழகரம் ளகரத்திற்கு முன் வைக்கப்பட்டது. ர - ற. றகரத்திற்கு இனமாக னகரம் தோற்றுவிக்கப்பட்டது. னகரம் தோன்று முன் நகரமே வழங்கிற்று. வெரிந், மகிழ்நன், கொழுநன் முதலிய சொற்களை நோக்குக. எழுத்து, படவெழுத்து (Hieroglyphic or Ideographic), அசையெழுத்து (Syllabic), ஒலியெழுத்து (Phonetic) என மூவகைப்படும். உலகில் முதன்முதல் தோன்றினது படவெ ழுத்தே. தமிழிலும் அதேயென்பது, “உருவே யுணர்வே யொலியே தன்மையென இருவகை யெழுத்து மீரிரண் டாகும்” என்று யாப்பருங்கல விருந்தியிலும், “இன்ன பலபல வெழுத்துநிலை மண்டபம்” | (19:53) |
என்று பரிபாடலிலும். “கடவு ளெழுதிய பாவை” | (20:111) |
என்று மணிமேகலையிலும் கூறியிருப்பதாலும், படமெழுதுதல் என்னும் வழக்கு இன்று முண்மையாலும் அறியப்படும். திருவாளர் தி. நா. சுப்பிரமணியன் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள பண்டைத் தமிழ் எழுத்துகள் என்னும் அரிய ஆராய்ச்சி நூலால், ஒருவகைத் தமிழெழுத்துகள் அடைந்து வந்துள்ள மாறுதல்களை நன்றாயறியலாம். தமிழில் இருவகையெழுத்துகள் இருந்தன. சொற்கள் முதன் முதல் தோன்றினவை தனிச்சொற்களே, குழந்தைகள் சோறு வேண்டும்போது சோறென்று மட்டும் கூறுதல் காண்க.
|