|
உண்டான் உறங்கினான்.
உண்டு உறங்கினான் என்பது பொருள். உண்டான் என்பது
முற்றுப் போலத் தோன்றினாலும் எச்சப் பொருள் தருதலினால் அது
முற்றெச்சம் எனப்படுகிறது. ஆதலால், உண்டான் என்பது முற்றெச்சம்.
தன்வினையும் பிறவினையும்
வினைச் சொற்கள் தன்வினை
(Verb denoting direct action),
பிறவினை (Causative Verb) என இருவகைப்படும்.
ஒருவன் தானாகச் செய்யும் செயலைத் தெரிவிப்பது தன்வினை.
அவன் படித்தான்.
அவள் இவ்வேலையைச் செய்தாள்.
ஒரு தொழிலைச் செய்விப்பவனது செயலைக் குறிப்பது பிறவினை.
அண்ணன், தன் தம்பியைப் படிப்பித்தான்.
அவள் இவ்வேலையைச் செய்வித்தாள்.
செய்வினையும் செயப்பாட்டுவினையும்
செய்வினையாவது (Active Verb) ஒரு பொருளின் தொழிலை
உணர்த்தும் வினைச்சொல்லாகும்.
இராமன் இராவணனைக் கொன்றான்.
செயப்படு பொருளுக்கு முதன்மை தரும் வினையே செயப்பாட்டு
வினை (Passive Verb) ஆகும். செயப்பாட்டு வினையில் ‘படு’ அல்லது
‘உண்’ என்னும் துணைவினை சேர்ந்துவரும்.
இராமனால் இராவணன் கொல்லப்பட்டான்.
இராமனால் இராவணன் கொலையுண்டான்.
|