பக்கம் எண் :

156நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


அலங்காரமுமாயிற்று. திருவீதி புறப்பாடு நடக்க வேண்டும்.
திருவீதி புறப்பாட்டிற்கு ஆயத்தமானதும் இங்கே வந்து அதை
அறிவிக்கச் சொல்லியிருந்தேன். அதை இராமய்யா இப்படி உளறிக்
கொட்டினான்“ என்று கூறினார். நண்பர் இதைக் கேட்டதும் அடக்க
முடியாத சிரிப்பால் விழுந்த விழுந்து சிரித்தார்.

நாமும் இதைக் கேட்டுச் சிரிக்கலாம். அப்படி பேசுகிறவர்களும்
எழுதுகிறவர்களும் தமிழ் நாட்டில் இல்லாமல் இல்லை. அத்தகையோர்
நூற்றுக் கணக்காகவும் - ஏன்? ஆயிரக் கணக்காகவும் - நாட்டில்
இருக்கின்றனர். மொழிப் பயிற்சி இல்லாமையே இதற்குக் காரணம்.
எழுத்தாளர்கள் எழுதத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது.
அவர்களுக்கு ஓரளவு இலக்கண இலக்கிய அறிவும் வேண்டும்.
எழுதுந்திறனும் மொழிப்பயிற்சியும் சேர்ந்தால்தான் எழுதும் நூல்
நிலைத்து நிற்கும்; இல்லாவிடின் அழிந்து போகும்.

"புது வீடு புகுவிழாவில் ஐயர் வந்து ஆசீர்வாதம் போட்டார்"
என்று கிறித்துவ நண்பர் சிலர் எழுதுகின்றனர்; பேசுகின்றனர்.
போடுவது என்ன இருக்கிறது? ஆசீர்வதித்தார் என்று சொல்ல
வேண்டும்; நல்ல தமிழில் சொல்வதென்றால் வாழ்த்தினார் என்று
கூறலாம்.

நாளிதழில் நிருபர்கள் "நாடகங்கள் காட்டப்பட்டன" என்று
எழுதுகிறார்கள். "நாடகங்கள் நடிக்கப்பட்டன" என்று எழுத வேண்டும்.

"ஆப்பிரிக்காவை இருண்ட கண்டம் என்று அழைக்கிறார்கள்"
என்று பூகோள நூலில் சிலர் எழுதியிருப்பதைக் கண்டிருக்கலாம்.
இஃது ஆங்கில மொழிப்பெயர்ப்பு. இருண்ட கண்டம் என்று
கூறுவர் என்க.

சென்னையிலிருந்து பத்து நூல்களை வரவழைத்தேன்
என்றெழுதுவது தவறு. வருவித்தேன் என்று எழுதுக.